மும்பையில் இருந்து செல்லும் நாகர்கோவில் ரெயில் நேரம் மாற்றப்படும் ரெயில்வே மந்திரி உறுதி

மும்பையில் இருந்து செல்லும் நாகர்கோவில் ரெயில் நேரம் மாற்றப்படும் என்று ரெயில்வே மந்திரி உறுதி

Update: 2017-08-06 21:55 GMT

மும்பை,

மும்பையில் இருந்து செல்லும் நாகர்கோவில் ரெயில் நேரம் மாற்றப்படும் என்று ரெயில்வே மந்திரி உறுதி அளித்ததாக மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்கம் தெரிவித்து உள்ளது.

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு ‘நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்’ இயக்கப்பட்டு வருகிறது. கேண்டீன் வசதி இருப்பதால் மும்பை தமிழர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு பெரும்பாலும் இந்த ரெயிலேயே பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் இந்த ரெயில் மும்பை சி.எஸ்.டி.யில் இருந்து மதியம் 12.10 மணிக்கு கிளம்புகிறது.

அதிகளவில் தென் மாவட்ட மக்கள் பயணிக்கும் இந்த ரெயில் அவர்கள் இறங்கும் பிரதான ரெயில் நிலையமான திருநெல்வேலிக்கு நள்ளிரவு 1.25 மணிக்கே சென்றடைகிறது.

இது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய போக்குவரத்து இன்மை காரணமாக பயணிகள் விடியும் வரையிலும் ரெயில் நிலையத்திலேயே காத்து கிடக்கும் நிலைமையும் ஏற்படுகிறது.

நீண்டநாள் கோரிக்கை

எனவே நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் திருநெல்வேலிக்கு நள்ளிரவு வந்து சேருவதை தவிர்க்க வேண்டும் என்றும், இதற்கு மும்பையில் இருந்து அந்த ரெயில் கிளம்பும் நேரத்தை மாற்ற வேண்டும் என்றும் மும்பை தமிழர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்கமும் இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன் நிர்வாகிகள் ரெயில்வே மந்திரியையும், அதிகாரிகளையும் சந்தித்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் ரெயில்வே அமைச்சகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவை தென்மத்திய மும்பை பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் செவாலே, மத்திய ரெயில்வே ரெயில் பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் பி.எஸ்.கே.முத்துராமலிங்கம் ஆகியோர் ஏற்பாட்டில் மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் எஸ்.அண்ணாமலை, பொதுச் செயலாளர் அப்பாதுரை, துணை செயலாளர் மாடசாமி ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

நேரத்தை மாற்ற உறுதி

அந்த மனுவை பெற்றுக் கொண்ட மந்திரி சுரேஷ் பிரபு, மும்பை – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்றி தினசரி இயக்குவது தொடர்பாக அறிவிப்பு வருகிற ரெயில்வே கால அட்டவணையில் வெளியிடப்படும் என்றும், மும்பையில் மாட்டுங்கா – சயான் இடையே தாராவி ரெயில் நிலையம் அமைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் உறுதி அளித்ததாக மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்