திருவள்ளூர் நகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை விற்றால் அபராதம்

திருவள்ளூர் நகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-08-06 21:15 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருவள்ளூர் நகராட்சியை குப்பை இல்லாத நகராட்சியாக மாற்றிட புதிதாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சியால் அறிவிக்கப்பட்ட சேகரித்தல் மற்றும் பிரித்தல் முறைக்கு பொதுமக்கள் இணங்கி கழிவுகளை அவ்வாறாக தனித்தனியாக வழங்க வேண்டும். மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள், நச்சுத்தன்மை உடைய கழிவுகளை சாலைகள் மற்றும் வடிகால்வாய்களில் கொட்டுதல் தடை செய்யப்பட்டுள்ளது.

தனிநபர் குடியிருப்பு, நட்சத்திர அந்தஸ்துள்ள தங்கும் விடுதி, மதுபான பார்கள், தனியார் பள்ளி, மகளிர் மற்றும் ஆண்கள் தங்கும் விடுதி, தனியார் அலுவலக வளாகம், தனியார் ஆஸ்பத்திரி, உணவகம், நடமாடும் உணவகம், திருமண மண்டபம், தையல் கடை, பழைய இரும்புக்கடை, இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை, மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் கடை, கார், பஸ், லாரி பழுது பார்க்கும் கடை, சூப்பர் மார்க்கெட், டைல்ஸ், சானிட்டரி பொருட்கள், மொசைக், மரம் ஓடு, சினிமா தியேட்டர், ஜவுளிக்கடை, மரக்கடைகள், கட்டிடக்கழிவுகள் என பல்வேறு கடைகளுக்கு மாதம் தோறும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். மேலும் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் உருவாகும் குப்பைகளை பச்சை நிற குப்பைத்தொட்டியிலும், மட்காத மறு சுழற்சிக்கு உகந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்களை தனியாக பிரித்து ஊதா நிற குப்பைத்தொட்டியில் சேகரித்து ஒவ்வொரு புதன்கிழமையன்றும் துப்புரவு பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்க வேண்டும். திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவள்ளூர் நகராட்சியை குப்பை மற்றும் பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றிட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்