வீட்டுவரி உயர்வினை திரும்பப்பெறவேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தல்

வீட்டுவரி உயர்வினை திரும்பப்பெற வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

Update: 2017-08-06 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் வீட்டுவரியை 50 சதவீதம் காங்கிரஸ் அரசு உயர்த்தி உள்ளது. இதனால் வீட்டு வாடகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுவையில் வாடகை வீட்டில் குடியிருக்கும் சுமார் 2 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்யும் தொழில் அதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஆளுங்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளிடம் முறையாக வரியை வசூல் செய்யாத முதல்–அமைச்சர் நாராயணசாமி ஏழை எளிய மக்கள் மீது பல மடங்கு தண்ணீர் வரி உயர்வு, வீட்டுவரி உயர்வு என வரியை உயர்த்தி ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதை பாரதீய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி மூலம் புதுச்சேரிக்கு ரூ.600 கோடி கூடுதலான வருவாய் கிடைக்கும் நிலையில் அரசு உயர்த்தியுள்ள தண்ணீர் வரி மற்றும் வீட்டுவரியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். புதுச்சேரியில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது.

அவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கட்டணம் போன்றவற்றுக்கு மிகவும் கஷ்டப்படும் நிலையில் அவர்களைப்பற்றி நாராயணசாமிக்கு அக்கறை இல்லாத காரணத்தினால் இதுபோன்ற வரி உயர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வரிகளை உயர்த்தி ஏழை மக்களை மேலும் பரம ஏழைகளாக மாற்றியுள்ளார். புதுச்சேரியில் தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கில் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

மேலும் கூட்டுறவு நிறுவனங்களான பாப்ஸ்கோ, பாசிக் போன்ற அரசு நிறுவனங்களின் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இப்படி பொதுமக்கள் திண்டாடி கொண்டிருக்கும் வேளையில் இந்த வரி உயர்வு என்பது புதுவை மக்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதார சுமையாகும்.

புதுச்சேரி அமைச்சர்கள் தங்களது சொந்த வீட்டை மனைவி பெயரில் வைத்துக்கொண்டு புதுவை அரசிடம் பல லட்ச ரூபாய் வாடகையாக வசூல் செய்கின்றனர். உடனடியாக உயர்த்தியுள்ள வரிகளை குறைக்காவிட்டால் பாரதீய ஜனதா சார்பில் வருகிற 17–ந்தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும். மதுபான தொழிற்சாலைகளுக்கும், மதுக்கடைகளுக்கும் வரிச்சலுகை அளித்து புதுவையின் கலாசாரம் மற்றும் பொதுமக்களை சீரழித்து வரும் முதல்–அமைச்சர் நாராயணசாமி ஏழை, எளிய மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் கேள்விக்குறியாக்கி வருவதை பாரதீய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்