விபத்தில் 6 பேர் பலி: ஆம்புலன்ஸ் விரைவாக வந்திருந்தால் சிலரை காப்பாற்றி இருக்கலாம்

வேலூர் ரத்தினகிரி அருகே கார்கள் மோதலில் 6 பேர் பலியான சம்பவத்தில் ஆம்புலன்ஸ் விரைவாக வந்திருந்தால் சிலரை காப்பாற்றி இருக்கலாம் என மீட்பு பணிக்கு உதவிய பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

Update: 2017-08-06 23:00 GMT
வேலூர்,

ரத்தினகிரி நந்தியாலம் அருகே நேற்று மாலை நடந்த கோர விபத்தில் 6 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்தனர். அவர்களில் பலர் போலீசாருடன் இணைந்து மீட்பு பணிக்கு உதவினர். விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:-

விபத்தில் கார்கள் சிக்கியதும் பயங்கர சத்தம் கேட்டது. நாங்கள் உடனடியாக அங்கு வந்தபோது விபத்தில் சிக்கிய 3 கார்களும் அப்பளம் போல் நொறுங்கி கிடந்தன. அருகில் சென்று பார்த்த போது பலர் உடல் நசுங்கி இறந்து பிணமாக கிடந்தனர். மேலும் பலர் கூக்குரலிட்டு கொண்டிருந்தனர்.

அந்த இடத்தில் காரில் இருந்து எரிபொருள் கீழே சிதறி கிடந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டோம்.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்து குறித்து உடனடியாக நாங்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தோம். எனினும் விபத்து நடந்து வெகு நேரம் கழித்து தான் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தது. உடனடியாக வந்திருந்தால் சிலரின் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.

பூட்டுத்தாக்கு, மேல்விஷாரம், ஆற்காடு தனியார் கல்லூரி ஆகிய இடங்களில் விபத்துகளை தடுக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல 6 பேரை காவுவாங்கிய நந்தியாலம் பகுதியிலும் பேரிகார்டுகள் அமைக்க வேண்டும். அவ்வாறு இந்த இடத்தில் பேரிகார்டுகள் அமைத்தால் விபத்துகளை தடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்