அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினை விரைவில் சரியாகி விடும்

அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினை விரைவில் சரியாகி விடும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Update: 2017-08-06 23:15 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வருகிற 16–ந்தேதி (புதன்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 4 அமைச்சர்கள் கலந்து கொண்டு அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தில் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன என்று புகார் தெரிவித்துள்ளீர்கள். இது பற்றி வனத்துறை அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிதம்பரத்தில் முதலைகள் அதிகம் உள்ளதால் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது என்று சட்டசபையில் விவாதிக்கப்பட்டுள்ளது. மக்களை பாதிக்காத வகையில் சிதம்பரத்தில் முதலை பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் இருக்கிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், இது பங்காளி சண்டை தான். இந்த உள்கட்சி பிரச்சினை விரைவில் சரியாகி விடும் என்றார்.

கடலூர் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் விழாவை புறக்கணித்து வருவது குறித்து கேட்டதற்கு, பதில் கூற மறுத்து விட்டார். அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், தங்கமணி ஆகியோரும் இதற்கு பதில் கூற மறுத்தனர்.

இதேபோல் டி.டி.வி. தினகரன் கட்சியில் புதிய பதவிகள் வழங்கியதற்கு, ஒருசில எம்.எல்.ஏ.க்கள் அதை ஏற்காமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களே என்று கேள்வி கேட்டபோது, அதற்கும் அமைச்சர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

மேலும் செய்திகள்