மாநில அளவிலான சிலம்பம் போட்டி 350 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

தஞ்சையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் 350 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Update: 2017-08-06 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவிற்கு தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் வரவேற்றார்.

இதில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்தும் 350-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சிலம்பம், ஆயுதம், நாட்டுக்குத்துவிரிசை, அலங்காரசிலம்பம் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் மலேசிய நாட்டை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டன. முதலிடம் பெற்றவருக்கு வெண்கல சிலை பரிசாக வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் தஞ்சை ராமசாமி, மணப்படையூர் சுந்தரம், திருப்புறம்பியம் கணேசன், ஆரியபடையூர் ஜெயராமன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிலம்பாட்ட கழக பொதுச்செயலாளர் முரளிகிருஷ்ணா, பொருளாளர் ரவிச்சந்திரன், வக்கீல் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக்கழக பொதுச்செயலாளர் ஜலேந்திரன் நன்றி கூறினார்.

முன்னதாக மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், “தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு சிலம்பாட்டம். இதனை புதுவழியில் மக்கள் மத்தியில் பிரபலபடுத்தும் வகையில் இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகில் 9 நாடுகளில் சிலம்பம் உள்ளது. மலேசியாவிலும் சிலம்பம் போட்டி பிரபலமாக உள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு மட்டும் அல்ல, உணவு, உடைகள் போன்றவையும் அழிந்து வருகின்றன. இதனை நாம் மீட்டெடுக்க வேண்டும். அந்த வகையில் சிலம்பம் வீரர்களாகிய எங்களுக்கு சிலம்பம் போட்டியை மீட்டெடுக்க வேண்டிய கடமை உள்ளது”என்றார். 

மேலும் செய்திகள்