குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி தென்னூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-06 23:00 GMT
திருச்சி,

திருச்சி தென்னூர் குத்பிஷாநகர், காவல்காரத்தெரு, வெள்ளாளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக குடிநீர் சீராக வரவில்லை என்றும், அவ்வப்போது வரும் தண்ணீரும் மிக குறைவாகவும், கலங்கலாகவும் வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் அந்த பகுதியினர் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், குடிநீர் கேட்டும் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் தென்னூர் ஹைரோட்டில் தில்லைநகர் ஆர்ச் அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் இப்ராகிம் மற்றும் தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், கடந்த சில நாட்களாகவே குடிநீர் சரியாக வராததால் அவதி அடைந்து வருகிறோம் என்று கூறினார்கள். உடனே அவர்களிடம், அந்த பகுதியில் கூடுதலாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

மேலும் செய்திகள்