அ.தி.மு.க. வினர் (புரட்சித்தலைவி அம்மா) சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க.வினர் (புரட்சித்தலைவி அம்மா) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-08-06 23:00 GMT
திருத்துறைப்பூண்டி,

திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் (புரட்சித்தலைவி அம்மா) தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தை மர்மநபர், கத்தியால் குத்த வந்ததாகவும், இந்த சம்பவம் யார் தூண்டுதலின்பேரில் நடைபெற்றது. இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் (புரட்சித்தலைவி அம்மா) நேற்று திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி நகர பொறுப்பாளர் முனியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் பரமசிவம், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் தனசேகரன், செயலாளர் ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின்பேரில் சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையம் அருகே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்