வேலூர் அருகே கோர விபத்து கார்கள் மோதலில் 6 பேர் சாவு 10 பேர் படுகாயம்

வேலூர் ஆற்காடு அருகே 3 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 10 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2017-08-06 23:15 GMT
வேலூர்,

சென்னை-பெங்களூரு இடையே இருவழித்தடத்தில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று மதியம் 2 மணியளவில் வேலூரிலிருந்து ஆற்காடு நோக்கி பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரத்தினகிரியை அடுத்த நந்தியாலம் அருகே சென்றபோது அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரன் (வயது 55) என்பவர் வேலூர் வருவதற்கு சென்னை-பெங்களூரு சாலையில் செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் சாலையை குறுக்காக கடக்க முயன்றார். திடீரென மோட்டார்சைக்கிள் குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருப்பதற்காக காரை டிரைவர் அந்த இடத்தில் உள்ள வழியாக எதிர்திசையில் செல்லும் சாலைக்கு திருப்பினார். ஆனால் அவர் மீதும் மோதியவாறு கார் சென்னை-பெங்களூரு ரோட்டில் திரும்பியது. அப்போது சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி வந்த கர்நாடக பதிவெண் கொண்ட கார் அதன் மீது பயங்கரமாக மோதியது. அடுத்த வினாடியே பெங்களூரு நோக்கி வந்த மற்றொரு காரும் விபத்தில் சிக்கிய கார்கள் மீது பயங்கரமாக மோதியது.

கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டபோது ஏற்பட்ட சத்தம் அந்த பகுதியையே அதிரவைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் ரத்தினகிரி போலீசாரும் தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர். இந்த விபத்தில் சிலர் கார்களுக்குள்ளேயே இறந்து கிடந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி துடித்தனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு வேலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் 5 பேர் இறந்தனர். மேலும் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் காயம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரனும் இறந்து விட்டார். இதனால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.இந்த விபத்தில் காயம் அடைந்த கஸ்தூரி (38), சரண் (10), மோகன் (45), காயத்ரி (15), ரூபஸ்ரீ (21), மற்றொரு கஸ்தூரி (24), கீர்த்தன் (25), நிஷாந்த் (25), பிரினித் (14) ஆகிய 9 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே விபத்தில் சிக்கிய கார்களின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கின. இந்த விபத்தால் சென்னை- பெங்களூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து மீட்பு பணிகளில் போலீசாரும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேரத்துக்கு பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்களில் ஒருவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த ஞானராஜ், பெங்களூருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. மற்றவர்கள் பெயர் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து தொடர்பாக ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்