எடப்பாடி அரசு தி.மு.க.வுடன் கூட்டு வைத்துள்ளது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

எடப்பாடி அரசு, தி.மு.க.வுடன் கூட்டு வைத்துள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2017-08-07 02:30 GMT

விருதுநகர்,

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் சிவகாசியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆளும் அரசு வேகமாக செயல்படாத காரணத்தினால் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் டெங்கு பாதிப்பு உள்ளதால் தமிழகத்திலும் டெங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்பிரச்சினையில் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம். எடப்பாடி அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்தால் துரைமுருகனுக்கு கோபம் வருகிறது.

நான் ஏற்கனவே கூறியதைப்போல எடப்பாடி அரசு தி.மு.க.வுடன் கூட்டு வைத்துள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் சட்டமன்றத்தில் பிரச்சினைகளை பற்றி பேசாமல் வெளிநடப்பு செய்கிறார். ஏனெனில் எடப்பாடி அரசுடன் அவர்கள் கூட்டு வைத்துள்ளனர். துரைமுருகன் நான் முதல்–அமைச்சராக இருக்கும்போது குடிநீர் பிரச்சினைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார். குடிநீர் பிரச்சினை பற்றி பேச எனக்கு அருகதை இல்லை என கூறுகிறார். நான் முதல்–அமைச்சராக இருக்கும் போது தான் ஜல்லிக்கட்டு பிரச்சினை ஏற்பட்டது. 10 லட்சம் இளைஞர்கள், மாணவர்கள் மெரினாவில் கூடினர். இப்பிரச்சினையை நான் எப்படி தீர்க்கப்போகிறேன் என ஸ்டாலின் காத்து கொண்டிருந்தார். ஆனால் அந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டேன்.

சென்னை குடிநீர் பிரச்சினைக்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவை சந்தித்து 2½ டி.எம்.சி. தண்ணீரை பெற்று வந்தேன். சென்னைக்கு ஒரு மாதத்திற்கு 1 டி.எம்.சி. தண்ணீர் தான் தேவை. இதனால் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. நான் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவன். அவருக்கு சோதனை வந்தபோது 3 முறை என்னை முதல்–அமைச்சராக நியமித்தார். சசிகலா நடராஜன் போடி நாயக்கனூர் தொகுதியில் என்னை தோற்கடிப்பேன் என கூறுகிறார். நான் இரண்டு முறை பெரியகுளம் தொகுதியிலும், 2 முறை போடி தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளேன். மக்கள் எனக்கு என்றும் ஆதரவளிப்பார்கள்.

நடிகர் கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர். அனைத்து மொழிகளையும் உள்வாங்கி சிறப்பாக நடிக்கக் கூடியவர். அவர் தமிழர். அவருக்கு இந்த அரசைப்பற்றி கருத்து கூற உரிமை இருக்கிறது. அவர் இந்த அரசில் ஊழல் மலிந்து விட்டது என்று தான் கூறினார். அதற்கு அமைச்சர்கள் அவரை தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர்.

நாங்கள் தொடங்கியுள்ள தர்மயுத்தம் தொடர்கிறது. தர்மயுத்தம் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன். தேர்தல் கமி‌ஷன் சசிகலாவை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அவரோ, அவரால் நியமிக்கப்பட்டவர்களோ தலைமை கழக கட்டிடத்தில் நுழைவதற்கு தகுதி கிடையாது. அவைத்தலைவர் மதுசூதனனும், பொருளாளரான நானும் தான் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். எங்களுக்குத்தான் தலைமை கழகத்திற்கு செல்ல தகுதியுண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்