லாரி டிரைவர் வெட்டிக்கொலை கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

நெல்லை பேட்டையில் முன்விரோதத்தில் லாரி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டர். கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2017-08-06 23:30 GMT
பேட்டை,

நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ஆனந்த்(வயது 21), டிப்பர் லாரி டிரைவர். இவர் பேட்டை அருகே உள்ள சுத்தமல்லியில் தனது லாரியின் உரிமையாளர் வீட்டில் தங்கி இருந்து லாரியை ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவில் பேட்டை செக்கடி படையாச்சி தெருவில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வெளியில் நின்று ஆனந்த் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது, மர்ம கும்பல் ஒன்று வந்தது. அவர்கள் ஆனந்தை சுற்றிவளைத்து தாக்கினர். பின்னர் தாங்கள் வைத்து இருந்த அரிவாளால் ஆனந்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த ஆனந்த் ரத்த வெள்ளத்தில் துடி,துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் சிதறி ஓடினார்கள். பின்னர் இதுகுறித்து உடனடியாக பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணாசிங், டவுன் உதவி கமிஷனர் மாரிமுத்து, பேட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முன்விரோதத்தில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. அதாவது கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பேட்டையில் ஒருவர் வீட்டு விசேஷ நிகழ்ச்சி நடந்தது. அப்போது படையாச்சி தெருவைச் சேர்ந்த பெருமாள்(65) என்பவரும் அங்கு வந்தார். இவருக்கும், ஆனந்த் குடும்பத்துக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. விசேஷ வீட்டிற்கு வந்த போது ஆனந்துக்கும், பெருமாளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த வழக்கு போலீசில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஆனந்த் தனது தாத்தா வீட்டிற்கு வந்ததை பெருமாள் பார்த்துள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட பெருமாள், ஆனந்தை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி பெருமாள், அவருடைய மனைவி மாரியம்மாள், மகன் சுடலைமணி என்ற மருது உள்பட 4 பேர் சேர்ந்து ஆனந்தை சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு, தப்பிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற பெருமாள் உள்பட 4 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்