ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க கத்தியுடன் வந்தவர் கைது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

திருச்சி விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க கத்தியுடன் வந்தவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2017-08-06 23:30 GMT
திருச்சி,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் அணியை சேர்ந்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்தனர். அவர்களை வரவேற்க 3 பேரின் ஆதரவாளர்களும் விமான நிலையத்தில் காத்து இருந்தனர். விமானநிலையத்தை விட்டு வெளியே வந்த 3 பேரும் தனித்தனியாக காரில் ஏறி சென்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியாக வெளியே வந்த போது அவரை சூழ்ந்து கொண்டு அவரது ஆதரவாளர்களும் வந்தனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சி நிர்வாகிகள் பூங்கொத்துகள் வழங்கியும், மாலைகள், பொன்னாடைகள் அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். அப்போது ஆதரவாளர்களில் ஒருவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறி முன்னேறி வந்தார்.

ஆனால் அந்த நபரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது கூட்ட நெரிசலில் அந்தநபர் கட்டியிருந்த வேட்டி அவிழ்ந்தது. அவர் அணிந்து இருந்த அரைக்கால் சட்டை(டவுசர்) பாக்கெட்டில் இருந்து கத்தி ஒன்று கீழே விழுந்தது. உடனே அவர் கீழே குனிந்து கத்தியை எடுத்தார். இதனை கண்ட மத்திய தொழிற்பாதுகாப்புபடை போலீஸ்காரர் ஒருவர் அந்த நபரை பிடித்து விமானநிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார்.

விமானநிலைய போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து விமானநிலைய போலீசார் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், “திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் விண்நகர் பகுதியை சேர்ந்த தட்டுரிக்‌ஷா தொழிலாளி சோழராஜன்(வயது 48) என்பதும், இவர் அ.தி.மு.க.வில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து வருவதும்“ தெரியவந்தது.

போலீசார் சோழராஜனிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலை நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்