சீரழித்த சின்னப் பையனும், குண்டு மனிதனும்

வரலாறு எத்தனையோ பாடங்களை மனித குலத்துக்கு கற்றுத் தந்து இருக்கிறது. அவை எல்லாவற்றிலும் மிக மோசமான பாடத்தை தந்தவர்கள் சின்னப் பையனும், குண்டு மனிதனும்தான்.

Update: 2017-08-06 05:13 GMT
ரலாறு எத்தனையோ பாடங்களை மனித குலத்துக்கு கற்றுத் தந்து இருக்கிறது. அவை எல்லாவற்றிலும் மிக மோசமான பாடத்தை தந்தவர்கள் சின்னப் பையனும், குண்டு மனிதனும்தான்.

யார் இவர்கள்?... இரண்டாம் உலக போரில் பேரழிவை தந்தவர்கள். அமெரிக்காவின் அதிபயங்கர சக்திகள்.

இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா ஒருபுறமும் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை இன்னொரு புறமுமாக கைகோர்த்து போரில் குதித்தன. ஜெர்மனியும், இத்தாலியும் வீழ்ந்ததால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த யுத்தம் முடியும் தருணத்திற்கும் வந்துவிட்டது.

போருக்கு காரணமான ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டும், அந்த நாடு சரணாகதி அடைந்தும் கூட அன்றைய ஜப்பான் பிரதமர் ஹிடேகி டோஜோ போரை நிறுத்த முன்வரவில்லை.

அந்த நிலையில்தான் 1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி அன்று காலை 8 மணிக்கு சின்னப் பையன் தனது வேலையை ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் காண்பித்தான்.

ஏற்கனவே தனது ஹவாய் தீவின் ‘பியர்ல்’ துறைமுகத்தை தாக்கி கடற்படைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதற்காக ஜப்பான் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த அமெரிக்கா ‘லிட்டில் பாய்’ (சின்னப் பையன்) என்ற 4½ டன் எடைகொண்ட அணுகுண்டை எனோலா காய் என்ற போர் விமானம் மூலம் ஹிரோஷிமா மீது வீசியது.

இங்கிலாந்தின் சம்மதத்துடன் இந்த அணுகுண்டு வீசப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அணுகுண்டு கதிர்வீச்சால் ஹிரோஷிமா நகரின் 75 சதவீதம் சுடுகாடாக மாறியது. செறிவூட்டிய யுரேனியத்தால் அமெரிக்கா தயாரித்த முதல் அணுகுண்டு அதுதான்.

இந்த குண்டு வீச்சில் 20 ஆயிரம் ஜப்பானிய போர் வீரர்களும், பொதுமக்களில் 50 ஆயிரம் பேரும் கொத்துக்கொத்தாக செத்து விழுந்தனர். எங்கு காணினும் மரண ஓலங்கள். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமும், உடல் ஊனமும் அடைந்தனர்.

அப்போது, ஆசியா கண்டத்தில் நாடுகளை கைப்பற்றும் தீராத வேட்கையில் இருந்த ஜப்பான், சின்னப் பையன் தனது வேலையை காட்டிய பிறகும் நிறுத்தாததன் விளைவாக, அடுத்த 3 நாட்களில் (ஆகஸ்டு 9-ந் தேதி) ஜப்பானின் நாகசாகி நகரின் மீது ‘பேட்மேன்’ (குண்டு மனிதன்) என்னும் 4¾ டன் எடை கொண்ட மற்றொரு அணுகுண்டை போக்ஸ்கார் என்னும் விமானம் மூலம் அமெரிக்கா போட்டது.

இது 40 ஆயிரம் மக்களை காவு வாங்கியது. 1.5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பலத்த காயம். அது வாழ்நாளிலும் ஆற்ற முடியாத சோகம். நாகசாகியில் வீசியது, புளூட்டோனியம் வகை அணுகுண்டு. இதற்கும் வீரியம் அதிகம். இதனால்தான் 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி ஜப்பான், அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்தது. இரண்டாம் உலக யுத்தமும் முடிவுக்கு வந்தது.

அணுகுண்டு கதிர் வீச்சில் எலும்புகூடு போல் ஆகிப்போன ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு சுமார் 20 ஆண்டுகள் ஆயிற்று. அந்த நகரங்களின் பல்வேறு கட்டிடங்கள் இன்றும் கூட அணுகுண்டு வீச்சின் அடையாள சின்னத்தின் எச்சங்களாக காட்சியளிக்கின்றன.

அணுகுண்டு என்றால் என்ன? அதன் தாக்கம் எப்படி இருக்கும்? என்பதை அந்த 2 நாட்களில் உலக நாடுகள் உணர்ந்து கொண்டன. ஜப்பானியர்கள் அதை அனுபவ பூர்வமாக அறிந்தனர்.

அதன்பிறகு உலக நாடுகள் 2 குழுக்களாக பிரிந்து நேரடி யுத்தம் நடத்தவில்லை என்றாலும் கூட அவ்வப்போது பனிப்போர் தலை தூக்குவதும் பின்னர் தணிவதும் காணப்படுகிறது. இடையிடையே அணு ஆயுதங்களை பயன்படுத்தவோம் என்ற மிரட்டலும் விடுக்கப்படுகிறது. தற்போது நாடுகளை பிடிக்கும் ஆசை சீனாவுக்கு இருப்பது போன்ற தோற்றம் தென்படுகிறது.

3-ம் உலக யுத்தம் என ஒன்று வந்தால் அது மனித குலத்திற்கு இறுதி முடிவு கட்டுவதாக இருக்கும் என்கிறார்கள், போரியல் ஆய்வாளர்கள்.

சின்னப் பையனும், குண்டு மனிதனும் இனி இந்த உலகிற்கு எப்போதும் வேண்டாம்... போரில்லாத உலகம் காண்போம் என சர்வதேச சமுதாயம் உறுதி கொள்ளவேண்டும்.

- லால்குடி மாயவன் 

மேலும் செய்திகள்