தாதர் சிவாஜி பார்க் கடலில் மூழ்கி அண்ணன், தம்பி உள்பட 3 சிறுவர்கள் பலி

தாதர் சிவாஜி பார்க் கடலில் மூழ்கி தாராவியை சேர்ந்த அண்ணன், தம்பி உள்பட 3 சிறுவர்கள் பலியானார்கள்.

Update: 2017-08-05 23:00 GMT

மும்பை,

தாதர் சிவாஜி பார்க் கடலில் மூழ்கி தாராவியை சேர்ந்த அண்ணன், தம்பி உள்பட 3 சிறுவர்கள் பலியானார்கள்.

கடலுக்குள் விழுந்த பந்து

மும்பை தாராவி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் நேற்று தாதர் சிவாஜி பார்க் கடற்கரையில் கிரிக்கெட் விளையாட சென்றனர். காலை 11 மணியளவில் சிறுவர்கள் விளையாடி கொண்டு இருந்த பந்து கடலுக்குள் விழுந்தது. பந்தை எடுக்க ரோகித் (வயது 15) என்ற சிறுவன் சென்றான். அப்போது அடித்த அலையில் சிக்கி சிறுவன் கடலில் தத்தளித்தான். இதை கவனித்த அவனது அண்ணன் மனோஜூம் (16) அவனை காப்பாற்ற கடலில் இறங்கினான். இதில் அவனும் ராட்சத அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு சென்றான். கடலில் மூழ்கிய 2 சிறுவர்களும் உதவி கேட்டு அலறினர். எனவே கரையில் நின்ற மற்றொரு சிறுவன் பரத் (13) 2 பேரையும் காப்பாற்ற கடலில் இறங்கினான்.

3 சிறுவர்கள் பலி

இதில் சிறிது நேரத்தில் 3 சிறுவர்களும் கடலில் மூழ்கி மாயமானார்கள். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் ஒரு படகு சம்பவத்திற்கு வந்தது. இந்தநிலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு 3 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சைக்காக கே.இ.எம். மற்றும் பாபா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிறுவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். பின்னர் சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

தாராவியில் சோகம்

இந்த சம்பவம் குறித்து மாகிம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களில் ஒருவரான பரத் தாராவி அண்ணாநகர், ஜெகுரு பகுதியில் வசித்து வந்தவர் ஆவார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். சகோதரர்களான மனோஜ், ரோகித் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கடலில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியான சம்பவம் தாராவி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்