புதுவையில் விமான சேவை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது கவர்னர் கிரண்பெடி பேட்டி
புதுவையில் தொடங்கப்படும் விமான சேவை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
புதுச்சேரி,
கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். சமீபகாலமாக தூய்மை இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். புதுவையில் இருந்து ஐதராபாத்திற்கு வருகிற 16-ந் தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி நேற்று காலை கவர்னர் மாளிகையில் இருந்து லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஆயுத்த பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பிரிபெய்டு ஆட்டோ, கார் வசதி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து என்.சி.சி. மாணவர்களுடன் சேர்ந்து விமான நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் மாணவர்களிடம் இந்த மரக்கன்றுகளை இடைவிடாமல் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் மேலும் எங்கெங்கு மரக்கன்றுகள் நடமுடியுமோ அங்கெல்லாம் நட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
விமான சேவை...
பின்னர் கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விமான சேவையில் பயணிகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பயணிகளுக்கு நிழல் தரும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த விமான சேவை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது. தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது கவர்னர் மாளிகையில் உள்ள அதிகாரிகள், என்.சி.சி. மாணவ- மாணவிகள் உடனிருந்தனர்.