கவர்னர் கிரண்பெடியின் செயல்பாட்டால் புதுவை அரசு முடங்கி உள்ளது அமைச்சர் கந்தசாமி குற்றச்சாட்டு
கவர்னர் கிரண்பெடியின் செயல்பாட்டால் புதுவை அரசு முடங்கி உள்ளது என்று அமைச்சர் கந்தசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி சென்றார். அங்கு அவருடைய கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கந்தசாமி கண்டன உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
கோழைத்தனமான செயல்
மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 3 ஆண்டில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. மக்களுக்கு தொல்லை கொடுக்கும் திட்டங்கள் தான் கொண்டுவரப்பட்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பாக செயல்படுத்தினார். அப்போது கொண்டு வரப்பட்ட திட்டங்களை மூடிமறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றனர்.
ஒரே இரவில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்கினர். தற்போது இறந்தால் கூட ஆதார் கார்டு அவசியம் என்று அறிவித்துள்ளனர். நமது தலைவர் ராகுல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு கோழைத்தனமான செயல் ஆகும்.
புதுச்சேரி கவர்னர் பா.ஜ.க. நிர்வாகியாகவும், கவர்னர் அலுவலகத்தை பா.ஜ.க. தலைமை அலுவலகமாகவும் செயல்படுத்துகிறார். துறைமுகத்தை தூர்வாருவதில் ஊழல் நடைபெறுவதாகவும் கவர்னர் கூறி வருகின்றார். இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தவரே அவர் தான். டிரெட்ஜிங் கார்ப்ரேஷன் மூலம் தூர்வார நடவடிக்கை எடுத்தவர் கவர்னர்தான். அந்த கோப்பில் முதல்வரோ, அமைச்சரோ கையொப்பம் இடவில்லை.
முடங்கி உள்ளது
வருகிற 16-ந்தேதி விமான போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், விமான நிலையத்தை ஆய்வு செய்து வருகிறார். அந்த திட்டத்தையும் நிறுத்துவதற்காகத்தான் அவரின் ஆய்வு இருக்கும். மேலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான கோப்பு அனுப்பியும் அனுமதி தரவில்லை. பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தும் கிரண்பெடி, டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்காதது ஏன்? கிரண்பெடி ஊரை சுத்தம் செய்வதாக கூறி வலம் வருகின்றார். இதற்கு முன் புதுச்சேரி சுத்தமாக இல்லையா?
பா.ஜ.க.வின் தலைவியாக செயல்படும் கிரண்பெடியால் அமைச்சர்களை, எம்.எல்.ஏ.க்களை என்ன செய்ய முடியும். வழக்கு தான் போடலாம். நிறைய வழக்குகளை நாங்கள் சந்தித்துள்ளோம். கவர்னர் கிரண்பெடியின் செயல்பாட்டால் புதுச்சேரி அரசே முடங்கி உள்ளது. அவர் போலீஸ் சூப்பிரண்டைப்போல் செயல்படுகின்றார். புதுச்சேரியை ஒரு காவல் நிலையமாக பார்க்கிறார்.
முதல்-அமைச்சர் பதவியை அடைய முடியாது
என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை விமர்சனம் செய்து பேசுவது தப்பில்லை. ஆனால் ரங்கசாமியை விமர்சித்து பேச வேண்டாம். அவரை பேசி, பேசி பெரிய ஆளாக்கிவிட்டுள்ளோம். நாம் என்ன கொண்டுவந்துள்ளோம், கொண்டுவர உள்ளோம் என்பதை மட்டும் பேசுவோம். நியமன எம்.எல்.ஏ.க்கள் பெயரை நான் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை என கவர்னர் கிரண்பெடி கூறுகின்றார். ஆனால் மத்திய அரசோ கவர்னர் பரிந்துரைத்ததன் பேரில்தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்தில் உண்மையை கவர்னர் வெளியிடுவாரா? எப்படியாவது குறுக்கு வழியில் எம்.எல்.ஏ.வாகி விடலாம் என பா.ஜ.க. வினர் நினைக்கின்றனர். புதுவை மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாது. என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஆட்சி மாற்றம் செய்யப்போவதாக கூறுவதெல்லாம் எதுவும் நடக்காது.
பா.ஜ.க.வின் சட்ட விதிகள் அதற்கு இடம் கொடுக்காது. 65 வயதிற்குள் இருப்பவர்கள்தான் முதல்-அமைச்சர் பதவியை அடைய முடியும் என்பது பா.ஜ.க.வின் சட்டவிதி. ரங்கசாமிக்கு 65 வயதை தாண்டிவிட்டதால் அவரால் முதல்-அமைச்சர் பதவியை அடைய முடியாது. ரங்கசாமி கடைசி வரைக்கும் என்.ஆர். காங்கிரசைத்தான் நடத்துவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, தேவதாஸ், பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம், ஐ.என்.டி.யு.சி. மாநில தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் காங்கிரஸ் சார்பில்...
அதேபோல் புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை கடற்கரை காந்தி சிலை அருகில் வாயில் கருப்புத்துணி கட்டி அமைதியான முறையில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். துணை தலைவர் சரவணன், பொது செயலாளர்கள் சத்தியவேந்தன், கோபாலமூர்த்தி, ராஜாராமன், முத்துக்குமாரசாமி, செந்தில் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
51 பேர் கைது
இந்த போராட்டம் பற்றிய தகவல் அறிந்த உடன் பெரியகடை போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம், இங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 51 பேரை கைது செய்தனர்.