கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது மேலும் 2 பேருக்கு வலைவீச்சு

புதுவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-08-05 23:15 GMT
புதுச்சேரி,

புதுவையில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன.

அதனை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் உத்தரவின் பேரில் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் தலைமையில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

ரகசிய தகவல்

இந்த நிலையில் திலாஸ்பேட்டை கனகன் ஏரிக்கு அருகில் உள்ள ஸ்ரீராம் நகரில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்ட உடன் அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த 6 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடியது. உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 4 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

பிடிபட்ட 4 பேரையும் போலீசார் கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நெல்லித்தோப்பு ஒத்தவாடை வீதியைச் சேர்ந்த அருள் என்ற அருள்ராஜ் (வயது 29), திருக்கனூர்பேட் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சூர்யா(20) கல்லூரி மாணவர், நித்தி என்ற ஜோசப்(33), புதுநகர் பகுதியை சேர்ந்த பிரதாப்(21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் நித்தி என்ற ஜோசப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் அவர்களிடம் ஒரு கிலோ 50 கிராம் எடையுள்ள 103 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் புதுவையில் கல்லூரி மாணவர்களை இலக்காக கொண்டு அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அருள்ராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், 3 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். மேலும் தப்பி ஓடிய உருளையன்பேட்டையைச் சேர்ந்த லூர்து, அசோக் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்