திருப்பத்தூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ரெயில்கள் 1½ மணி நேரம் தாமதம்

திருப்பத்தூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் ரெயில்கள் 1½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

Update: 2017-08-05 22:00 GMT

ஜோலார்பேட்டை,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மொளகாரன்பட்டி ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 6.30 மணிக்கு ஒரு சரக்கு ரெயில் சென்றது.

அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் நோக்கி செல்லும் ரெயில் பாதையில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை சரக்கு என்ஜின் டிரைவர் பார்த்தார். உடனடியாக அவர் மொளகாரன்பட்டி மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தண்டவாளத்தை பராமரிக்க பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விரிசலை சரி செய்தனர்.

அந்த நேரத்தில் பொக்காராவில் இருந்து தன்பாத் செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பத்தூர் ரெயில் நிலையத்திலும், கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் மொளகாரன்பட்டி ரெயில் நிலையம் அருகேயும் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இந்த 2 ரெயில்களும் 1½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

மேலும் ஒரு சரக்கு ரெயில் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்