பெங்களூருவில் முதல்–மந்திரி சித்தராமையா நகர்வலம் அலட்சியமாக இருந்த என்ஜினீயர் பணி இடைநீக்கம்

பெங்களூருவில் நேற்று முதல்–மந்திரி சித்தராமையா திடீரென்று நகர்வலம் மேற்கொண்டார்.

Update: 2017-08-05 21:30 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று முதல்–மந்திரி சித்தராமையா திடீரென்று நகர்வலம் மேற்கொண்டார். பெங்களூரு சர்ச்தெரு, எம்.ஜி.ரோடு, எச்.எஸ்.ஆர். லே–அவுட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அவர் சென்றார். அப்போது அந்த பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை முதல்–மந்திரி சித்தராமையா பார்வையிட்டார்.

மேலும் ஜெயநகரில் நடைபெற்று வரும் இந்திரா மலிவு விலை உணவகம் அமைக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். முன்னதாக எச்.எஸ்.ஆர். லே–அவுட் பகுதிக்கு முதல்–மந்திரி சித்தராமையா சென்றபோது, அங்குள்ள பூங்கா நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை அறிந்தார்.

இதுபற்றி அங்கிருந்த மாநகராட்சி என்ஜினீயர் வெங்கடேசிடம் சித்தராமையா கேட்டார். பின்னர் பணியில் அலட்சியமாக இருந்ததாகவும், பூங்கா நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்ட அனுமதித்ததாகவும் கூறி மாநகராட்சி என்ஜினீயர் வெங்கடேசை பணி இடைநீக்கம் செய்து முதல்–மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார்.

பின்னர் முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், “பெங்களூருவில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டேன். நகர் முழுவதும் ரூ.7,300 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த பணிகளை இந்த ஆண்டுக்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த பணிகள் முடிந்தால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்,“ என்றார். நகர்வலத்தின் போது முதல்–மந்திரி சித்தராமையாவுடன், மந்திரி கே.ஜே.ஜார்ஜ் இருந்தார்.

மேலும் செய்திகள்