மதுரவாயலில் பெண்களிடம் சங்கிலி பறித்த 2 பேர் கைது

மதுரவாயல் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-05 23:00 GMT
பூந்தமல்லி,

மதுரவாயல் பகுதியில் தொடர்ந்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து மதுரவாயல் உதவி கமிஷனர் ஜான்சுந்தர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இவர்கள் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு தாம்பரம்-மதுரவாயல் சாலை வானகரம் சர்வீஸ் சாலையில் மதுரவாயல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து திரும்பிச் செல்ல முயன்றனர்.

2 பேர் கைது

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், 2 பேரையும் சிறிது தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த மனோஜ் என்ற பாபு(வயது 19), அயனாவரத்தை சேர்ந்த சதீஷ் என்ற சண்டைக்கோழி(19) என்பதும் தெரிந்தது.

மேலும் இவர்கள், மதுரவாயல் பகுதியில் வீட்டுக்கு வெளியே தனியாக நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள் களை திருடி, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதையும் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து மனோஜ், சதீஷ் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர். பின்னர் 2 பேரையும் சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்