பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக கவர்னருடன் சந்திப்பு

பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வஜூபாய் வாலாவை நேற்று சந்தித்து பேசினார்கள்.

Update: 2017-08-05 22:30 GMT

பெங்களூரு,

பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வஜூபாய் வாலாவை நேற்று சந்தித்து பேசினார்கள். பின்னர் அவர்கள் 44 பேரும் ஒற்றுமையாக இருப்பதாக நிருபர்களிடம் தெரிவித்தனர்.

6 எம்.எல்.ஏ.க்கள் விலகல்

குஜராத்தில் இருந்து டெல்லி மேல்–சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு வருகிற 8–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் மற்றும் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் ஆகிய 4 பேரும் போட்டியிடுகிறார்கள். குஜராத் மாநிலத்தில் இருந்து ஒருவர் டெல்லி மேல்–சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவதற்கு 47 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு தேவை.

பா.ஜனதா கட்சிக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். ஆனாலும் பா.ஜனதாவினர் சார்பில் 3 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்குள் இழுக்க அக்கட்சி முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர், அக்கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தனர். மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியானது.

44 பேர் பெங்களூரு வருகை

இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேருவதை தடுக்க கட்சி மேலிடம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. பின்னர் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் குஜராத்தில் இருந்து கடந்த மாதம்(ஜூலை) 28–ந் தேதி நள்ளிரவில் விமானம் மூலம் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டனர். அந்த எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொறுப்பை கர்நாடக மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் மேலிடம் வழங்கி இருந்தது. அதன்படி, குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் பெங்களூரு புறநகர் பிடதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களுடன் டி.கே.சிவக்குமாரும் சொகுசு விடுதியில் தங்கினார்.

பின்னர் கடந்த 2–ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சொகுசு விடுதியில் சோதனை நடத்தியதுடன், மந்திரி டி.கே.சிவக்குமாரை அங்கிருந்து சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர். டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான 64 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது. இதனால் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் இருந்து குஜராத் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையில், வருமான வரி சோதனை நேற்று முடிந்ததும் மந்திரி டி.கே.சிவக்குமார், குஜராத் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதாக கூறினார். இது அவர்களுக்கு புது தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்தது.

கவர்னருடன் திடீர் சந்திப்பு

இந்த நிலையில், நேற்று காலையில் தனியார் சொகுசு விடுதியில் இருந்து 2 பஸ்களில், 44 எம்.எல்.ஏ.க்களும் பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்தார்கள். பின்னர் அவர்கள் நேராக ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார்கள். அங்கு கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை 44 எம்.எல்.ஏ.க்களும் சந்தித்து பேசினார்கள். பின்னர் அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா தேனீர் விருந்து அளித்தார். மேலும் குஜராத் அரசியல் பற்றி எம்.எல்.ஏ.க்களிடம் கவர்னர் கேட்டு அறிந்து கொண்டார்.

கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து விட்டு எம்.எல்.ஏ.க்கள் வெளியே வந்தனர். பின்னர் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சக்திசிங் கோகில் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஒற்றுமையாக இருக்கிறோம்

‘‘காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கூறியப்படி நாங்கள் பெங்களூருவுக்கு வந்துள்ளோம். கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா குஜராத்தை சேர்ந்தவர். அவர் குஜராத் சபாநாயகராகவும் இருந்துள்ளார். அதனால் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். கவர்னர் அரசியல்வாதி இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கவர்னர் வஜூபாய் வாலாவை நாங்கள் சந்தித்து பேசியதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

டெல்லி மேல்–சபை தேர்தல் சுதந்திரமாக நடக்க வேண்டும். அதற்காக போராடி வருகிறோம். சில எம்.எல்.ஏ.க்கள் குஜராத் செல்ல இருப்பதாக வெளியான தகவல் உண்மை அல்ல. நாங்கள் 44 பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருப்போம். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.’’

இவ்வாறு அவர் கூறினார்.

டி.கே.சிவக்குமார் சந்திப்பு

முன்னதாக கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மந்திரி டி.கே.சிவக்குமார் சந்தித்து பேசினார். இதனால் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தார்கள். பின்னர் எம்.எல்.ஏ.க்கள் 44 பேரையும் கவர்னர் மாளிகையில் இருந்து விதானசவுதாவுக்கு மந்திரி டி.கே.சிவக்குமார் அழைத்து சென்றார். விதானசவுதாவை எம்.எல்.ஏ.க்கள் சுற்றி பார்த்தார்கள். பின்னர் விதானசவுதா முன்பு அமர்ந்து எம்.எல்.ஏ.க்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

மேலும் விதானசவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் குஜராத் எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து கொண்டு அடையாள தர்ணாவில் சில நிமிடங்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ‘ரகுபதி ராகவ ராஜாராம்‘ பாடலை பாடினார்கள். அதன்பிறகு, விதானசவுதாவில் இருந்து பெங்களூரு புறநகரில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டு சென்றார்கள். அவர்களுடன் மந்திரி டி.கே.சிவக்குமாரும் உடன் சென்றார்.

குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் இன்று டெல்லி செல்ல முடிவு?

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூருவுக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பெங்களூரு புறநகரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் டெல்லி மேல்–சபைக்கு வருகிற 8–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அவர்கள் அனைவரும் நாளை(திங்கட்கிழமை) வரை பெங்களூருவில் இருப்பார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், குஜராத் எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) டெல்லி செல்ல இருப்பதாகவும், ரக்ஷா பந்தனையொட்டி சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருப்பதாகவும், டெல்லியில் இருந்து குஜராத் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்