திருமங்கலம் பகுதியில் நள்ளிரவில் வீடு, வீடாக போலீசார் சோதனை செய்ததால் பரபரப்பு
சென்னை திருமங்கலம் பாடிகுப்பம் பகுதியில் போலீசார் வீடு, வீடாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோயம்பேடு,
சென்னை திருமங்கலம் பாடிகுப்பம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருமங்கலம் போலீசார் வீடு, வீடாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை நந்தனத்தில் விலைஉயர்ந்த செல்போனை காணவில்லை என்றும், சாட்டிலைட் வழிகாட்டுதல்படி இந்த பகுதியில் தான் தொலைந்துபோன செல்போன் இருப்பதாக காட்டப்படுவதாக கூறி போலீசார் சோதனை நடத்தினார்கள். நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த சோதனையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அங்கு இருந்து சென்றனர்.
நந்தனத்தில் காணாமல் போன செல்போன் குறித்து திருமங்கலம் போலீசார் ஏன் விசாரிக்க வேண்டும்? புகார் இல்லாமல் வாய் மொழி உத்தரவின் பேரில் ஏன் இந்த நள்ளிரவில் சோதனை நடந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அப்பகுதி மக்கள் எழுப்பி உள்ளனர்.
2 நாட்களுக்கு முன்பு திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் இருந்து மணிகண்டன் என்ற குற்றவாளி கைவிலங்குடன் தப்பி விட்டதாகவும் அவர் பாடிகுப்பம் பகுதியில் மறைந்திருப்பதாக தகவல் வந்ததால், மக்கள் அச்சமடைய கூடாது என்பதற்காக மறைமுகமாக விசாரித்ததாகவும் போலீசார் கூறியதாக தெரியவந்துள்ளது.