குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2017-08-05 22:30 GMT
குன்னூர்,

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் அடர்ந்த வனப்பகுதி இருப்பதால் காட்டுயானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பர்லியார் மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காப்பி எஸ்டேட்களில் பலாப்பழ சீசன் தொடங்கும் போது சமவெளி பகுதியில் இருந்து பழத்தை சாப்பிட காட்டு யானைகள் வருவது உண்டு.
இவ்வாறு சமவெளிபகுதியில் இருந்து வரும் யானைகள் பலாப்பழங்களை தின்றுவிட்டு, குன்னூர்- மேட்டுப் பாளையம் சாலை அருகே அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்து வாழை போன்ற விவசாய பொருட்களையும் நாசப்படுத்துகிறது. இந்த ஆண்டு பலாப்பழ சீசன் தொடங்கியவுடன் சமவெளி பகுதியிலிருந்து 8 காட்டு யானைகள் அடங்கிய கூட்டம் இடம் பெயர்ந்து பர்லியார் மரப்பாலம் ரன்னிமேடு பகுதிகளில் சுற்றித்தரிந்தன.

இந்த யானைகள் தனித்தனியாக பிரிந்து உணவு தேடி வந்தன. பின்னர் குன்னூர் நகருக்கு அருகில் உள்ள தனியார் விடுதியில் புகுந்து கேட்டை உடைத்து நாசம் செய்தன. பலாப்பழ சீசன் முடிவுற்ற நிலையிலும் சமவெளிபகுதியில் சரியான மழை இல்லாமல் வறட்சி நிலவி வருவதால் யானைகள் சமவெளி பகுதிக்கு செல்லவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 யானைகள் ஒரு குட்டியுடன் நஞ்சப்புர சத்திரம் குடியிருப்பு பகுதியில் புகுந்து அங்குள்ள தனியார் விடுதியின் கேட்டை உடைத்து நாசப்படுத்தியது. மேலும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது.

இந்த நிலையில் ஒரு காட்டு யானை குட்டியுடன் குன்னூர் நகர பகுதியை அடுத்துள்ள கன்னிமாரியம்மன் கோவில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்தது. பின்னர் அங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் காட்டு யானை புகுந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குன்னூர் வனச்சரகர் பெரியசாமி தலைமையில் வனவர் சவுந்தரராஜன், வன ஊழியர்கள் பாபு, விக்ரம் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த யானைகள் குன்னூர் நகர பகுதிக்குள் வராதவாறு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று குன்னூர் பகுதியில் காலை முதலே மழை பெய்ததால் மேகமுட்டமாக இருந்தது. இதனால் யானைகளை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் வனத்துறையினர் மேகமுட்டத்தையும் பொருட்படுத்தாமல் காட்டு யானை குட்டியுடன் குன்னூர் நகரில் குடியிருப்புக்குள் வராமல் தடுக்க தீ மூட்டியும், பட்டாசுகளை வெடித்தும் விரட்ட முயன்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்