போலீஸ் ஏட்டுவை தாக்கியதாக வழக்கு: மதுக்கடை மேற்பார்வையாளர் திடீர் கைது

மேச்சேரி அருகே போலீஸ் ஏட்டுவை தாக்கியதாக மதுக்கடை மேற்பார்வையாளர் நேற்று திடீரென கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து மேட்டூர், ஓமலூர் தாலுகாக்களில் கடைகளை அடைத்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-08-05 23:30 GMT
மேச்சேரி,

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள வெள்ளார் ஊராட்சி வெள்ளப்பம்பட்டியைச் சேர்ந்த வைத்தியநாதன் (வயது 42). இவர் சேலம் மத்திய சிறையில் ஏட்டாக பணிபுரிந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேச்சேரி அருகே தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் கேண்டீன் அருகே உள்ள அரசு மதுபானக்கடைக்கு கடந்த 27-ந் தேதி மது அருந்த வந்தார்.

அங்கு அவர் ரூ.80 கொடுத்து விட்டு ரூ.100-க்கு மதுபாட்டில் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும் பணியில் இருந்த கடை மேற்பார்வையாளர் மோகன்குமார், விற்பனையாளர் முருகன் ஆகியோர் அவரை தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவர் மறுநாள் காலை வரை அங்கேயே கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அவருடைய உறவினர்கள் வைத்தியநாதனை மீட்டு தர்மபுரி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அவருடைய மனைவி லதா மேச்சேரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், வைத்தியநாதனை தாக்கியதாக கடை மேற்பார்வையாளர் மோகன்குமார், விற்பனையாளர் முருகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் வைத்தியநாதனின் தந்தை செங்கோடன், தாயார் வசந்தா, மனைவி லதா மற்றும் பெண்கள் என 12 பேர் சேர்ந்து அந்த மதுக்கடைக்கு வந்தனர். அங்கு அவர்கள் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளரை கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அப்போது கடையில் இருந்து விற்பனையாளர்கள் செந்தில்குமார், முருகன் ஆகியோருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் தகராறு முற்றவே, அவர்கள் கடைக்குள் புகுந்து ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை உடைத்து சேதப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தாக்கியதில் முருகன் காயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக கடை விற்பனையாளர் செந்தில்குமார் மேச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செங்கோடன் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 9 பெண்கள் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் வைத்தியநாதன் தாக்கப்பட்ட வழக்கில், கடை மேற்பார்வையாளர் மோகன்குமாரை மேச்சேரி போலீசார் நேற்று மாலை திடீரென கைது செய்தனர். இதையறிந்த டாஸ்மாக் ஊழியர்கள் மோகன்குமார் கைதை கண்டித்து மேட்டூர், ஓமலூர் தாலுகாக்களில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை இரவு 7.30 மணியளவில் அடைத்து போராட்டம் நடத்தினர்.

மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் மேச்சேரி போலீஸ் நிலையத்திற்கு இரவில் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் கைது செய்யப்பட்ட மோகன்குமாரை விடுவிக்க கோரி போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த கலால் துறை தனி தாசில்தார் உண்ணாமலை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், விவேகானந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று(ஞாயிற்றுக் கிழமை) காலை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் டாஸ்மாக் ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் இரவு வரை மேச்சேரி போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. 

மேலும் செய்திகள்