பாளையங்கோட்டையில் 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இணைப்பு சாலை பணி தொடங்கப்படுமா? மாநகராட்சி அதிகாரி பதில்

பாளையங்கோட்டை மாநில தமிழ் சங்கத்தில் இருந்து, தெற்கு புறவழிச்சாலை வரை இணைப்பு சாலை அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-08-05 20:30 GMT
நெல்லை,

 பாளையங்கோட்டை மாநில தமிழ் சங்கத்தில் இருந்து, தெற்கு புறவழிச்சாலை வரை இணைப்பு சாலை அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட இந்த பணி தொடங்கப்படுமா என்று கேட்டதற்கு அவர் பதில் அளித்தார்.

இணைப்பு சாலைகள்

நெல்லை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆங்காங்கே இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் பின்புறத்தில் இருந்து மாவட்ட அறிவியல் மையம் வழியாக நெல்லை கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை அமைந்து இருக்கும் பிரதான சாலையை இணைக்கும்படி அண்ணா சாலை அமைக்கப்பட்டது. தற்போது நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் அந்த வழியாக இயக்கப்படுகின்றன. இதனால் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

அதேபோல் நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து அருணகிரி தியேட்டர் வரை ரூ.53 லட்சம் செலவில் 1.45 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டது. இந்த புதிய சாலை கடந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இந்த புதிய சாலையால் நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் புதிய சாலை வழியாக செல்கின்றன.

புதிய இணைப்பு சாலை

பாளையங்கோட்டை நேரு கலையரங்கம் எதிரே மாநில தமிழ் சங்கம் வழியாக வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் ஒரு புதிய திட்ட வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டது. 1.4 கிலோ மீட்டர் நீளமும், 80 அடி அகலத்திலும் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சாலை அமைக்கும் பணிக்கு ரூ.19 கோடியும், அந்த பகுதியில் தனியார் நிலங்களை கையகப்படுத்த ரூ.68 கோடியும் ஒதுக்க வேண்டும் என திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

இந்த திட்டத்துக்கு 26–11–2012 அன்று நடந்த நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகும் வேலை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

அந்த பகுதியில் புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட்டால், முருகன்குறிச்சி சிக்னல், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகேயும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த இணைப்பு சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை வழியாக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்துக்கு எளிதாக சென்று விடலாம். இந்த திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த பகுதியில் தனியார் நிலங்கள் சாலை அமைக்க ஒப்புதல் தர தாமதமாவதால் சாலை அமைக்கும் பணி காலதாமதமாவதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரி பதில்

இதுகுறித்து நெல்லை மாநகராட்சி பொறியாளர் நாராயண நாயரிடம் கேட்ட போது, “இந்த இணைப்பு சாலை திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என மாநகராட்சியும் விரும்புகிறது. இந்த திட்ட குறிப்புகள் அனைத்தும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கியதும் பணி தொடங்கும்“ என்றார்.

மேலும் செய்திகள்