கட்சியை பலப்படுத்தவே புதிய நிர்வாகிகளை தினகரன் நியமனம் செய்துள்ளார் கருணாஸ் பேட்டி

கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைக்காகவே புதிய நிர்வாகிகளை தினகரன் நியமனம் செய்துள்ளார் என்று குற்றாலத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2017-08-05 20:45 GMT

தென்காசி,

கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைக்காகவே புதிய நிர்வாகிகளை தினகரன் நியமனம் செய்துள்ளார் என்று குற்றாலத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

பேட்டி

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ. குற்றாலம் சுற்றுலா மாளிகையில் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கட்சியை பலப்படுத்தவே நிர்வாகிகள் நியமனம்

ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியின் தொண்டர்களாலும், மேல்மட்ட உறுப்பினர்களாலும் ஒருமித்த கருத்தோடு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவரால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யப்பட்ட தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர்.

சசிகலா சிறை சென்ற காரணத்தினால் கட்சியை வழிநடத்த துணை பொது செயலாளராக டி.டி.வி. தினகரனை நியமித்தார். மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகியை குறை கூறுவது கேலிக்குரியது. ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மக்களுக்கு அவர் கனவு கண்ட திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும், ஜெயலலிதா அரசு பல ஆண்டுகள் தொடர வேண்டும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கட்சியை பலப்படுத்த தினகரன் முயற்சி செய்து வருகிறார். இதற்காக தான் இன்னும் பொறுப்பாளர்கள் தேவை என்பதை அறிந்து அவர் அறிவித்துள்ளார்.

சந்தர்ப்பவாத அரசியல்

ஓ.பன்னீர்செல்வம் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார். உண்மையாகவே மக்களுக்காக அவர் போராடுகிறார் என்றால் வரவேற்கலாம். நிகழ்கால அரசியலில் பேட்டி கொடுக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதா மறைவிற்கு முன்பு இருந்ததையும், இப்பொழுது இருப்பதையும் நான் பார்க்கிறேன்.

விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கிறது. அவரும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அரசியல் காரணமாக அவர் வஞ்சிக்கப்படுகிறாரோ என்றுதான் எனக்கு நினைக்க தோன்றுகிறது.

இணைய வேண்டும்

அ.தி.மு.க.வில் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது அந்த கட்சியின் தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. இணைய கூடாது, அந்த கட்சி அழிந்து விட வேண்டும், அது இருக்கும் இடம் தெரியாமலேயே போய் விட வேண்டும் என்பது சிலரின் எண்ணமாக உள்ளது. அதற்கு இடம் கொடுக்காமல் மேல்மட்ட தலைவர்கள் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் ஒன்று கூடி தங்களது தனிப்பட்ட கருத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் வெற்றி கொள்ள வேண்டும். இரு அணிகளும் இணைய வேண்டும். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்