ரத்த காயங்களுடன் கிடந்தவர் அடையாளம் தெரிந்தது மது போதையில் கல்லால் தாக்கிய நண்பர் கைது

ஆரல்வாய்மொழி அருகே ரத்த காயங்களுடன் கிடந்தவர் அடையாளம் தெரிந்தது. மேலும் அவரை மது போதையில் கல்லால் தாக்கிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-05 22:15 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் செல்லும் சாலையில் ஆரல்வாய்மொழி பஞ்சாயத்து தோட்டம் எதிர்புறம் வயலுக்கு செல்லும் வழியில் நேற்றுமுன்தினம் மாலை ஒரு வாலிபர் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில் அவர் யாரென்று அடையாளம் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் படுகாயங்களுடன் கிடந்தவர் ஆரல்வாய்மொழியை அடுத்த வில்லவிளையை சேர்ந்த பச்சைமால் (வயது 26) என்பது அடையாளம் தெரிந்தது. செங்கல்சூளை தொழிலாளியான அவர் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார்.

மது குடிக்க சென்றனர்

அப்போது, அவரது நண்பர் முப்பந்தல் கல்லுப்பொத்தை காலனியை சேர்ந்த முருகன் (27) என்பவர் பச்சைமால் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று மது குடிக்க அழைத்தார். பின்னர், இருவரும் மது குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஆரல்வாய்மொழி பஞ்சாயத்து தோட்டம் அருகே அமர்ந்து இருவரும் மது குடித்தனர். போதையில் இருந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகன் அருகில் கிடந்த கல்லை எடுத்து பச்சைமாலை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் படுகாயமடைந்தார்.

பின்னர், அவரை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கைது

இதையடுத்து முருகனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மது போதையில் தன்னை  பச்சைமால் தகாத வார்த்தைகளால் திட்டியதால் கல்லால் தாக்கியதாக, போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்