மேச்சேரி அருகே சிறைக்காவலர் மீது தாக்குதல்: கல்வீச்சில் விற்பனையாளர் காயம்; பெண்கள் உள்பட 10 பேர் கைது

`மேச்சேரி அருகே சிறைக்காவலரை தாக்கியதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மதுக்கடையை சூறையாடினர். கல்வீச்சில் மதுக்கடை விற்பனையாளர் காயமடைந்தார். இது தொடர்பாக பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-04 22:59 GMT
மேச்சேரி,

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள தொப்பூர் கேண்டீன் அருகில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சேலம் மத்திய சிறையில் காவலராக பணியாற்றி இடைநீக்கம் செய்யப்பட்ட மேச்சேரி அருகே உள்ள வெள்ளார் ஊராட்சி வெள்ளப்பம்பட்டி பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் (வயது 42) என்பவர் கடந்த 27-ந் தேதி இந்த மதுக்கடைக்கு வந்தார்.

அப்போது பணம் குறைவாக கொடுத்து அவர் மது கேட்டதாகவும், இதில் ஏற்பட்ட தகராறில் மதுக்கடை ஊழியர்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் அங்கேயே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்து மறுநாள் வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் வைத்தியநாதனின் தந்தை செங்கோடன், தாய் வசந்தா, மனைவி லதா மற்றும் உறவினர்கள் என 12 பேர் அந்த மதுக்கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள், வைத்தியநாதனை தாக்கி கோமா நிலைக்கு ஆளாக்கிய மதுக்கடை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று எழுதப்பட்ட பேனருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுக்கடையில் இருந்த விற்பனையாளர்கள் செந்தில்குமார், முருகன் ஆகியோரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மதுக்கடை சூறையாடப்பட்டது. உள்ளே இருந்த மதுபாட்டில்களும், பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

மேலும், கல்வீசப்பட்டத்தில் விற்பனையாளர் முருகன் காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் (மேச்சேரி), விவேகானந்தன் (கருமலைக்கூடல்), சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியநாதனின் உறவினர்கள் 10 பேரை பிடித்து அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து தனது கணவர் வைத்தியநாதனை தாக்கியதாக லதா அளித்த புகாரின்பேரில், மதுக்கடை மேற்பார்வையாளர் மோகன்குமார், விற்பனையாளர் முருகன் ஆகியோர் மீது மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் மதுக்கடை விற்பனையாளர் செந்தில்குமார் மேச்சேரி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், மதுக்கடைக்குள் அத்துமீறி நுழைந்து 39 பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்களையும், இதர பொருட்களையும் அடித்து நொறுக்கி மொத்தம் ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 400 மதிப்பில் சேதத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில், வைத்தியநாதனின் தந்தை செங்கோடன் உள்பட 12 பேர் மீது போலீசார் 9 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து வைத்தியநாதனின் தந்தை செங்கோடன், தாய் வசந்தா, மனைவி லதா உள்பட 10 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்