பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி லிங்காரெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற படைவீட்டம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 26-ந்தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. மேலும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதிஉலாவும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று செடல் மற்றும் தேர்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நேர்த்திக்கடன்
இதையடுத்து பகல் 1 மணிக்கு நடந்த செடல் உற்சவத்தில் பக்தர்கள் பலர் தங்களது உடலில் செடல் குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் படைவீட்டம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்தது.
இதில் முன்னாள் நகரசபை தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் சக்ரபாணி, பாலகிருஷ்ணன், சக்தி ஐ.டி.ஐ. சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.சி. சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.