பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக அறிவிப்பு: கிராம மக்களிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று கருத்து கேட்கிறார்
கடலூர் மாவட்டம் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்களிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று கருத்து கேட்கிறார்
பரங்கிப்பேட்டை,
கடலூர் மாவட்டம் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராம மக்களிடம் அன்புமணி ராமதாஸ் இன்று கருத்து கேட்க இருப்பதாக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் செல்வமகேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அன்புமணி ராமதாஸ் வருகை
கடலூர் மாவட்டத்தை மத்திய மாநில அரசுகள் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக அறிவித்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று (சனிக்கிழமை)பரங்கிப்பேட்டை அருகே பெரியப்பட்டு, அரியகோஷ்டி, கடவாச்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களை சந்தித்து கருத்து கேட்கிறார். முன்னதாக கருத்து கேட்பதற்காக பெரியப்பட்டுக்கு வரும் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு கடலூர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
கங்கணாங்குப்பத்தில் வரவேற்பு
இதேபோல் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் தொடர்பாக கிராம மக்களிடம் கருத்து கேட்பதற்காக வரும், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு கடலூர் மாவட்ட எல்லையான கங்கணாங்குப்பத்தில் வைத்து கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.