டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் வருமான வரி சோதனை: மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சட்ட அணியினர் ஆர்ப்பாட்டம்

டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெறுவதில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சட்ட அணியினர் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-08-04 20:30 GMT

பெங்களூரு,

டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெறுவதில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சட்ட அணியினர் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சட்ட அணியினர் ஆர்ப்பாட்டம்

மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை கடந்த 2–ந் தேதி தொடங்கி நேற்று இரவு வரை நீடித்தது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சட்ட அணியினர் பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடக காங்கிரஸ் சட்ட அணியின் தலைவர் தனஞ்செயா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் வருமான வரி சோதனைக்கு கண்டனம் தெரிவித்து கோ‌ஷங்களை எழுப்பினர். அவர்கள் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தனஞ்செயா பேசியதாவது:–

காங்கிரசின் புகழை கெடுக்க முயற்சி

கர்நாடகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. இதனால் பா.ஜனதாவினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றக்கூடாது என்ற எண்ணத்தில் மத்திய பா.ஜனதா அரசு இதுபோன்ற வருமான வரி சோதனைகளை நடத்துகிறது.

இதன் மூலம் காங்கிரசின் புகழை கெடுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. இதை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் அமருவது உறுதி. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை மத்திய அரசு தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஏவிவிட்டு வருகிறது. இதற்கு தேர்தல் வரும்போது மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு தனஞ்செயா பேசினார்.

மேலும் செய்திகள்