சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் தேரோட்டம் அமைச்சர்– கலெக்டர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது.

Update: 2017-08-04 20:30 GMT

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தேரோட்டம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 27–ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் ஆடித்தபசு திருவிழாவில் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி–அம்பாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கலைநிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரிகள் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9–ம் திருநாளான நேற்று நடைபெற்றது. காலை 5 மணிக்கு கோமதி அம்பாள் ரதத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து காலை 9.50 மணிக்கு தேரோட்டமும் நடைபெற்றது. தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்து£ரி ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

விழாவில் மாநில கூட்டுறவு விற்பனை இணைய துணை தலைவர் கண்ணன், ஆவின் தலைவர் ரமேஷ், சங்கரன்கோவில் நகரசபை ஆணையாளர் தாணுமூர்த்தி, கூட்டுறவு சங்க தலைவர்கள் சங்கரசுப்பிரமணியன், ஆறுமுகம், பரமகுருநாதன், கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து, இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி, பா.ஜ.க. மாவட்ட பார்வையாளர் வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாளை, தபசுக் காட்சி

சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். நகர் பகுதியில் நான்கு புறங்களிலும் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200–க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் சிரமமின்றி தபசுக்காட்சியை தரிசனம் செய்ய பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நகரின் பல இடங்களிலும் சமூக அமைப்புகள் சார்பில் அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்