ஆடிப்பெருக்கை முன்னிட்டு பந்தய மாடுகள் மூலம் நிலத்தில் உழ வுப்பணி விவசாய பணிகள் தொடங்கியது
ஓட்டப்பிடாரத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு விவசாயிகள், நிலங்களை பதப்படுத்தி பந்தய மாடுகள் மூலம் உழவுப்பணி செய்தனர்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு விவசாயிகள், நிலங்களை பதப்படுத்தி பந்தய மாடுகள் மூலம் உழவுப்பணி செய்தனர்.
ஆடிப்பெருக்குஓட்டப்பிடாரம் தாலுகாவில், சுமார் 200–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு உள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு மழையை நம்பி சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கு மேல், விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இதில் அதிக அளவில் உளுந்து, பாசிபயிறு, கம்பு, சோளம், வத்தல் போன்றவை பயிர் செய்யப்படுகிறது. இந்த பகுதி விவசாயிகள் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தங்களின் விளை நிலங்களை காளை மாடுகள் கொண்டு உழுது, விவசாயத்திற்கு ஆயத்தப்படுத்துவார்கள். தற்போது காளை மாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால், கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களை டிராக்டர் கொண்டு உழுது வந்தனர்.
பந்தய மாடுகள்இந்த நிலையில், ஓட்டப்பிடாரம் பகுதி விவசாயிகள் நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தங்கள் நிலங்களில் பந்தய மாடுகளை கொண்டு உழவு செய்து, விவசாய பணிகளை தொடங்கினார்கள். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஒட்டநத்தம், பரிவில்லிகோட்டை, புளியம்பட்டி, பசுவந்தனை, எப்போதும் வென்றான், உள்ளிட்ட பல கிராமங்களில், விவசாயிகள் உழ மாடுகள் இல்லாததால், டிராக்டர் கொண்டு நிலத்தை உழுதனர்.
இதுகுறித்து ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த விவசாயி மாரியப்பன் கூறுகையில்,‘ எங்களிடம் 3 ஜோடி பந்தய மாடுகள் உள்ளன. நாங்கள் பரம்பரை பரம்பரையாக நிலங்களை மாடுகள் கொண்டு தான் உழவு செய்து வருகிறோம். இதனால் உழவுக்கான செலவு குறைவதோடு, பயிரின் விளைச்சல் அதிகரிக்கிறது. தற்போது ஓட்டப்பிடாரம் பகுதிகளில் மாடுகள் வளர்ப்பு குறைந்து வருகிறது.
இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை டிராக்டர் கொண்டு உழவு செய்கிறார்கள். அப்படி டிராக்டர் மூலம் உழவு செய்யும் போது, அதற்கான செலவு அதிகரிக்கிறது. மேலும் பயிர் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு காளை மாடுகள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும், என்று கூறினார்.