குடிநீர் கேட்டு முக்காணியில் பொதுமக்கள் சாலைமறியல் ஏரலில் தரைமட்ட பாலத்தின் அடியில் மணலை அகற்ற எதிர்ப்பு

முக்காணியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திருச்செந்தூர்–தூத்துக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-04 21:00 GMT

ஆறுமுகநேரி,

முக்காணியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திருச்செந்தூர்–தூத்துக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதி குடிநீர் திட்டத்துக்காக, ஏரல் தரைமட்ட பாலத்தின் அடியில் மணலை அகற்ற, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், தாமிரபரணி ஆற்றில் தண்ணீரின்றி வறண்டு வருகிறது. இதற்கிடையே சுமார் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஏரல் தரைமட்ட தாம்போதி பாலம் வலுவிழந்து காணப்பட்டதால், அதன் அடியில் ஊர் மக்கள் மணலை கொட்டி சீரமைத்தனர். இதனால் பாலத்தின் அடிப்பகுதி வழியாக கசிவுநீர் வெளியேறவில்லை.

இதனால் ஏரலை அடுத்த வாழவல்லான் நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் வராததால், முக்காணி சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதை கண்டித்து, முக்காணியில் கடந்த 31–ந்தேதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த 2–ந்தேதி ஏரல் தரைமட்ட பாலத்தின் அடியில் இருந்த மணலை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். ஆனாலும் பாலத்தை தாண்டி தண்ணீர் செல்லவில்லை.

சாலைமறியல்

இந்த நிலையில், முக்காணியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் காலிக்குடங்களுடன் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி– திருச்செந்தூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) ராஜாராம், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், துணை தாசில்தார் ஜஸ்டின் செல்லத்துரை, குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லதம்பி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார் (ஆத்தூர்), சிவலிங்கம் (ஆறுமுகநேரி), வருவாய் ஆய்வாளர் சுவாமிநாதன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சமாதான கூட்டம்

இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து முக்காணி சேனை தலைவர் சமுதாய கூடத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ஏரல் தரைமட்ட பாலத்தின் அடியில் கொட்டப்பட்ட மணலை அகற்றினால்தான், வாழவல்லான் நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் வரும் என்று தெரிவித்தனர்.

ஏரலில் போராட்டம்

தொடர்ந்து அதிகாரிகள், ஏரல் தரைமட்ட பாலத்துக்கு சென்றனர். இதற்கிடையே ஏரல் தரைமட்ட பாலத்தின் அடியில் கொட்டியிருந்த மணலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் பாலத்தின் மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பொதுமக்கள் பிரதிநிதிகளை போலீசார் பேச்சுவார்த்தைக்கு ஏரல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு நடந்த சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில், ஏரல் தரைமட்ட பாலத்தின் அடியில் கொட்டியிருந்த மணலை முழுவதும் அகற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஏரல் தரைமட்ட பாலத்தின் அடியில் கொட்டி இருந்த மணலை பொக்லைன் எந்திரம் மூலம் முழுவதுமாக அகற்றினர். ஆனாலும் சிறிதளவே கசிவுநீர் பாலத்தை கடந்து சென்றது. அது போதுமானதாக இல்லாததால், மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி பாலத்தின் கீழ்புறம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் முக்காணி, ஏரலில் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்