மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம்: நாராயணசாமி இன்று ஆலோசனை அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு
மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
புதுச்சேரி,
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த முறையில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று மத்திய அரசை தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ஆகியோர் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவிடம் இதுகுறித்து தெரிவித்து வலியுறுத்தினர்.
கலந்தாய்வு தள்ளி வைப்பு
ஏற்கனவே புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடாக பெறப்பட்ட 293 இடங்களை நிரப்பிட நீட் தேர்வு தரவரிசை அடிப்படையில் முதல்கட்ட கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 19 இடங்களைத்தவிர அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.
மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் அதற்கான கட்டணங்களையும் சென்டாக் அலுவலகத்தில் செலுத்திவிட்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக இடஒதுக்கீட்டுக்காக நடைபெறுவதாக இருந்த சென்டாக் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நாராயணசாமி ஆலோசனை
நீட் தேர்வில் இருந்து புதுவைக்கு விலக்கு அளிக்கப்படுமா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்தநிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக புதுவை எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற செயலக 4-வது மாடியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.