விழுப்புரத்தில் 9-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டார்

விழுப்புரத்தில் வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டார்.

Update: 2017-08-03 22:23 GMT
விழுப்புரம்,

விழுப்புரத்தில் வருகிற 9-ந் தேதி (புதன்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இந்த விழாவிற்காக விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி விழா நடைபெறும் இடத்தை சுற்றிலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் கட்-அவுட்டுகள், அலங்கார வளைவுகள், விளம்பர பதாகைகள் வைக்கும் பணியும் நடந்து வருகிறது.

அமைச்சர் பார்வையிட்டார்

இந்த பணியை நேற்று காலை தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விழா ஏற்பாடுகள் மற்றும் விழாவிற்கு வருபவர்களின் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்யுமாறும் அரசுத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது கலெக்டர் சுப்பிரமணியன், குமரகுரு எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சுந்தரராஜன், அ.தி.மு.க. (அம்மா) ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், முத்தமிழ்செல்வன், வேலு, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ஜி.ஜி.சுரேஷ்பாபு, கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பசுபதி, வளவனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகவேல், வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் வக்கீல் செந்தில், ராமதாஸ், ஊராட்சி செயலாளர் என்ஜினீயர் ரமேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கண்டமானடி ராஜி, கூட்டுறவு அச்சக இயக்குனர் குமரன் உள்பட பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்