சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.

Update: 2017-08-03 22:19 GMT
சிதம்பரம், 

பொதுவாக ஆடி மாதம் என்பது பெண்களுக்கான பிரத்யேக மாதமாகும். இதில் ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப் படுகிறது. இவ்விழா காவிரியின் கரையோர பகுதியில் விசேஷமாக கொண்டாடப் படுவது வழக்கம். ஆற்றில் வெள்ளமென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சியை ஊட்டுவதால் காவிரி தாய்க்கு காணிக்கை தரும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற வேண்டியும் ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரைக்கு சென்று கங்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்து சுமங்கலி பூஜை நடத்தி, வழிபடுவார்கள்.

கொள்ளிடம்

அதேபோல் காவிரியின் கடைமடை பகுதியாக இருந்து வரும் சிதம்பரம் பகுதியில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வறட்சியால் கொள்ளிடம் ஆறு தண்ணீரின்றி வறண்டு கிடந்த போதிலும், சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் ஆற்றின் பள்ளமான பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் வைத்து ஆடிப்பெருக்கை கொண்டாட காலை முதல் ஆயிரக்கணக்கானோர் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர்.

ஆற்றில் நீராடிய பெண்கள் கரையோரத்தில் பூஜை செய்ய ஒரு இடத்தை பிடித்து கொண்டனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, அழகிய கோலமிட்டனர். தொடர்ந்து வாழை இலை விரித்து மண்ணால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். பின்னர் அகல் விளக்கு ஏற்றினர்.

தொடர்ந்து மங்கல பொருட்களான மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், புதுத்துணி, பனை ஓலையில் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, படையல் அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வைத்து காவிரி அன்னையை வழிட்டு பூஜை செய்தனர்.

புதுமண தம்பதிகள்

புதுமண தம்பதிகளை பொறுத்தவரையில் திருமணத்தன்று சூடிய மாலைகளை பத்திரப்படுத்தி வைத்து ஆடிப்பெருக்கன்று அதை ஆற்றில் விடுவது வழக்கம். அதேபோல் ஆற்றங்கரையில் சிறப்பு பூஜைகள் செய்து, புதுமண தம்பதிகள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தங்களின் திருமண மாலைகளை ஆற்றில் விட்டனர்.

இதன் மூலமாக ஆற்று நீரில் மாலை அடித்து செல்வது போன்று, புதுமண தம்பதிகளின் வாழ்வில் கஷ்டங்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இவர்களில் திருமண மாலை இல்லாத புதுமண தம்பதிகள் ஆற்றங்கரையில் சிறிய அளவில் சாமி செய்து பழங்களுடன் பூஜை செய்த பொருட்களை தாம்பூல தட்டில் வைத்து ஆற்று நீரில் விட்டனர்.

பின்னர் ஆற்றினை வணங்கி வாழை மட்டைகளில் விளக்கு ஏற்றி அதை ஆற்றில் விட்டனர். இதன் மூலமாக நீர்வளம் பெருகியது போன்று, அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்பதாகும்.

புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண்கள் அணிந்திருக்கும் தாலியை மாற்றி, மஞ்சள் சரடுடன் கூடிய புதிய தாலியை குடும்பத்தில் உள்ள மூத்த பெண்கள் அல்லது அவர்களது கணவர்கள் மூலமாக அணிந்து கொண்டனர். இதேபோல் திருமணமாகாத கண்ணி பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் கயிறை தங்களது கையில் கட்டிக்கொண்டனர்.

பூஜைகள் முடிந்த பின்னர், அனைவரும் கரையோரம் உள்ள பூங்காவில் அமர்ந்து தாங்கள் எடுத்து வந்த உணவை உண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து ஆடி, பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதனால் நேற்று வல்லம்படுகை கொள்ளிடக்கரை விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.

நடராஜருக்கு தீர்த்தவாரி

ஆடி பெருக்கை முன்னிட்டு புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நேற்று முன் தினம் இரவு தொடங்கிய உச்சிகால பூஜை காலை வரையில் நடந்தது. தொடர்ந்து காலை 7 மணிக்கு நடராஜர் வீதி உலாவாக கொள்ளிடக்கரைக்கு வந்தார். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் அங்கிருந்து சாமி மீண்டும் கோவிலுக்கு வீதி உலாவாக வந்தார். மாலையில் சாமி கோவிலை வந்தடைந்ததும் சாயரட்சை பூஜை, 2-வது கால பூஜை, அர்த்தசாம பூஜை ஆகியன நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்

இதேபோல் கடலூர் சில்வர் பீச், தென்பெண்ணை ஆற்றிலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இங்கு புதுமண தம்பதிகள் அவர்களது குடும்பத்தினருடன் வந்து, படையலிட்டு மாலையை கடல் நீரிலும், ஆற்று நீரிலும் விட்டு சென்றனர். 

மேலும் செய்திகள்