மங்களூரு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள்–பணம் திருட்டு

மங்களூரு அருகே, தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள்–பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2017-08-03 21:54 GMT

மங்களூரு,

மங்களூரு அருகே, தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள்–பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

தனியார் நிறுவன ஊழியர்

மங்களூரு அருகே நீர்மார்க்கம் பகுதியை சேர்ந்தவர் சந்திரநாத் ஜோகி. தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சந்திரநாத் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் சந்திரநாத்தின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

வீட்டிற்குள் புகுந்ததும், பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த நகைகள், பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். மாலை வேலை முடிந்ததும் சந்திரநாத் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது.

ரூ.4 லட்சம் நகைகள்–பணம் திருட்டு

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரநாத் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள், பணம் திருடப்பட்டு இருந்தது. யாரோ மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகள், பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. திருடு போனவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரநாத் மங்களூரு புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் சிறிது தூரம் மோப்பம் பிடித்து ஓடிவிட்டு நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து சந்திரநாத்தின் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை, கைரேகை நிபுணர்களின் உதவியுடன் போலீசார் பதிவு செய்து கொண்டு அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

இதுதொடர்பாக சந்திரநாத் அளித்த புகாரின்பேரில் மங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகைகள், பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்