மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் புள்ளிமானை வேட்டையாடிய 4 பேர் கைது

மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் புள்ளிமானை வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2017-08-03 22:30 GMT
மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் காப்புக்காடு பகுதியில் ஒருசிலர் சுருக்குக்கம்பியை வைத்து புள்ளிமானை வேட்டையாடியதாக மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில், வனவர் ரவி, வனக்காப்பாளர்கள் சுந்தரம், நித்தியானந்தம், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் காரமடை வனச்சரக பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கண்டியூர் காப்புக்காடு சரகப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியில் உள்ள தோட்டத்து சாலையில் 4 பேர் அவர்கள் வேட்டையாடிய புள்ளிமானின் தோலை உரித்து அதன் இறைச்சியை துண்டு துண்டாக வெட்டி பங்கு போட்டுக்கொண்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து அவர் களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

4 பேர் கைது

விசாரணையில் அவர்கள் நேருநகர் இருளர்பதி கெம்மாரம்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணப்பன் மகன் கார்த்தி (வயது 24), குமரன் மகன் சந்திரன் (27), ஈயன் மகன் லிண்டன் (23), ராமசாமி மகன் செந்தில்குமார் என்பதும், மான் இறைச்சி சாப்பிடுவதற்காக இவர்கள் சுருக்குக்கம்பியை வைத்து வேட்டையாடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த மானின் தலையில் கொம்பு இருந்ததை வைத்து அது ஆண் புள்ளிமான் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து மானின் இறைச்சி, சுருக்குக்கம்பி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப் பட்டனர். 

மேலும் செய்திகள்