அடிப்படை வசதி செய்யாமல் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளி

மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நாரணாபுரம் அரசு பள்ளியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2017-08-03 22:15 GMT
சிவகாசி,

சிவகாசியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நாரணாபுரம். இந்த பகுதியில் சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்கள் தான். இந்த பகுதியில் கடந்த 1917-ம் ஆண்டு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.

அதன் பின்னர் 1960-ல் நடுநிலைப்பள்ளியாகவும், 2010-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் அதே பகுதியில் உள்ள வேறு ஒரு இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 600 மாணவர்கள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்தனர். பத்தாம் வகுப்பு படித்த 50 மாணவர்கள், 56 மாணவிகள் என மொத்தம் 106 பேரும் தேர்ச்சி பெற்றனர். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற இந்த பள்ளியை தற்போது தமிழக அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அறிவித்துள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட நாரணாபுரம் பள்ளிக்கு கூடுதலாக 9 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய பாடங்களை கொண்ட ஒரு பிரிவும், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களை கொண்டு ஒரு பிரிவும் தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் தலா 30 மாணவர்கள் இருந்தாலே வகுப்புகள் தொடங்கி நடத்த அரசு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பள்ளியில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து தேர்வு பெற்று தற்போது சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் நாரணாபுரம் பள்ளி தரம் உயர்த்தப்பட்டதால் மீண்டும் இங்கேயே படிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

நாரணாபுரம் அரசு பள்ளியில் தற்போது 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 580 பேர் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க 21 ஆசிரியர்கள் உள்ளனர். இந்த நிலையில் பள்ளி தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் புதியதாக தொடங்கப்படும் பிளஸ்-1 வகுப்புக்கு சுமார் 80 மாணவர்கள் வரை சேர வாய்ப்பு உள்ளது. ஆனால் 660 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் இங்கு போதிய சுகாதார வளாக வசதி இல்லை. அதே போல் மாணவர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கும். அதே போல் நாரணாபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் தங்களின் சைக்கிள்களை பள்ளியின் வெளியே எந்த பாதுகாப்பு வசதியும் இல்லாமல் திறந்தவெளியில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.

அதே போல் தற்போது தொடங்கப்பட்டுள்ள பிளஸ்-1 வகுப்புகளுக்கு இரண்டு புதிய வகுப்பறைகள் தேவைப்படுகிறது. இதை ஏற்கனவே இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தலாம் என பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. போதிய இருக்கைகளும் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் நாரணாபுரம் பள்ளி தரம் உயர்த்தப்பட்டு இருப்பதால் அப்பகுதி மாணவர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வந்து படித்து விட்டு செல்வது இனி வரும் காலங்களில் தவிர்க்கப்படும். அதே நேரத்தில் தற்போது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு தேவையான வகுப்பறைகள், குடிநீர், சுகாதார வளாகம், விளையாட்டு மைதானம், சைக்கிள் நிறுத்தும் இடம் ஆகியவைகளை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது பிளஸ்-1 வகுப்பு 2 பிரிவுகளாக தொடங்கப்பட்டாலும் இனி வரும் காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே போல் அடுத்த ஆண்டு இந்த பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு தொடங்கப்பட இருக்கிறது. இதனால் உடனடியாக போதிய கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்பிலேயே அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட வுள்ளதால் மாணவர்களுக்கு போதியவசதி செய்து கொடுக்கப்படாவிட்டால் அது அவர்களது எதிர்காலத்துக்கே வேட்டு வைத்து விடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டுமென பெற்றோர் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

மேலும் செய்திகள்