திருவொற்றியூரில் மாற்றுப்பாதை அமைக்காமல் பாலம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவொற்றியூரில் மாற்றுப்பாதை அமைக்காமல் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் பக்கிங்காம் கால்வாய் மீது மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் கனரக வாகனங்களும், பஸ்களும் செல்லக்கூடாது என்று திடீரென்று தடை விதித்து உள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கான்கார் கன்டெய்னர் யார்டுக்கு டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொருட்களை ஏற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றி இரவு நேரங்களில் மட்டுமே வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வேலை செய்யும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
அதே போன்று பேசின்சாலை வழியாக செல்லும் மாநகர பஸ்களும் மாற்றுப்பாதையில் செல்கின்றது. எனவே அந்த பகுதியில் உள்ள ஊர் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
சாலை மறியல்
பாலம் அமைக்கும் பணியை தொடங்கும் முன்பே மாற்றுப்பாதை அமைத்து இருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்காது எனவும், மாற்று பாதை அமைக்காமல் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தொழிலாளர்கள், மற்றும் லாரி டிரைவர்கள் நேற்று அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் முகுந்தன், ஸ்டீபன் ஆகியோர் தலைமையில் மணலி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கன்டெய்னர் யார்டுக்கு கனரக வாகனங்கள் சென்று வர மாற்று பாதை அமைத்து தர வேண்டும் என்று கூறினர்.
இதுபற்றி சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.