ரூ.2 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் திருட்டு வழக்கில் 3 பேர் கைது
ரூ.2 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் திருட்டு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 51). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி வெளியூர் செல்வதற்காக பஸ் ஏற எழும்பூர் வந்தார். அங்குள்ள ஆம்னி பஸ் அலுவலகம் ஒன்றில் இருந்த போது அவர் வைத்திருந்த பை திருட்டு போய்விட்டது.
அதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்ததாக எழும்பூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின்பேரில் உதவி கமிஷனர் சுப்பிரமணி மேற்பார்வையில் எழும்பூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
3 பேர் கைது
இதுதொடர்பாக சென்னை மணலியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (30), கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சிவசங்கர் (20), விழுப்புரத்தை சேர்ந்த அப்பாஸ் உசேன் (28) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்கு பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.