காவிரியில் தண்ணீர் வராததால் ஆடிப்பெருக்கு விழா களை இழந்தது: கமலாலயகுளத்தில் பெண்கள் வழிபாடு

திருவாரூருக்கு காவிரி தண்ணீர் வராததால் ஆடிப்பெருக்கு விழா களை இழந்தது. விழாவையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் பெண்கள் வழிபாடு செய்தனர்.

Update: 2017-08-03 22:30 GMT
திருவாரூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் திகழ்ந்து வருகிறது. காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். பெண்கள் ஆறுகளின் கரைகளில் படையலிட்டு சுமங்கலி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். இந்தநிலையில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தண்ணீர் பிரச்சினையால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் ஆறு, வாய்க்காலில் மக்கள் கூட்டம் இன்றி ஆடி பெருக்கு விழா களை இழந்தது. இதனால் குளம், நீர் நிலைகள், மோட்டார் பம்பு செட்டுகள் ஆகிய இடங்களில் பெண்கள் படையலிட்டு வணங்கினர். இதேபோல் வீடுகளில் அடி பைப்புகள், தண்ணீர் குழாய்களில் மாலை அணிவித்து வழிபட்டனர்.

சிறப்பு பூஜை

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் காலை முதல் பெண்கள் கூட்டம் அலைமோதியது. குளத்தில் படிக்கட்டுகளில் மஞ்சளில் பிள்ளையார் உருவம் செய்து வைத்து காதோலை கருகமணியுடன், பேரிக்காய், வாழைப்பழம், வெல்லம் கலந்த அரிசி ஆகியவற்றை படையலிட்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். பின்னர் பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கையிலும் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். மேலும் தியாகராஜர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல காகிதகார தெரு சீதளாதேவி மாரியம்மன் கோவில், மருதப்பட்டிணம் மாரியம்மன் கோவில் ஆகிய அனைத்து கோவில் களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்