தூத்துக்குடி மாவட்டத்தில், 6–ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2ஏ தேர்வை 18,649 பேர் எழுதுகின்றனர்

தூத்துக்குடி மாவட்டத்தில், வருகிற 6–ந் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப்–2ஏ தேர்வை 18 ஆயிரத்து 649 பேர் எழுத உள்ளதாக, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2017-08-03 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், வருகிற 6–ந் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப்–2ஏ தேர்வை 18 ஆயிரத்து 649 பேர் எழுத உள்ளதாக, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) மூலம் பல்வேறு துறை உதவியாளர்கள் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2ஏ தேர்வு வருகிற 6–ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் உள்ள 67 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது.

18,649 பேர்

தூத்துக்குடியில் 33 மையங்களில் 9 ஆயிரத்து 162 பேரும், கோவில்பட்டியில் 20 மையங்களில் 5 ஆயிரத்து 667 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 4 மையங்களில் 955 பேரும், திருச்செந்தூரில் 10 மையங்களில் 2 ஆயிரத்து 865 பேரும் ஆக மொத்தம் 18 ஆயிரத்து 649 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வை கண்காணிக்க 13 கண்காணிப்பு குழுக்களும், 7 பறக்கும் படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு பஸ்கள்

இந்த தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளவாறு உரிய நேரத்தில் தேர்வுக்கூடத்தில் ஆஜராக வேண்டும். தேர்வு தொடங்கி 30 நிமிடத்துக்கு பிறகு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வெழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூடத்துக்கு பேஜர், செல்போன், கால்குலேட்டர், தகவல்கள் பதிவு செய்யும் மின்சாதனங்கள்,

குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள், கைப்பைகள் போன்றவை எடுத்து வர அனுமதிக்கபடாது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையங்களுக்கு தேவையான சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்