ஆன்லைன் மூலம் பதிவு செய்வதில் தாமதம் சார்பதிவாளர் அலுவலகத்தை பத்திர எழுத்தர்கள் முற்றுகை
ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்வதில் தாமதத்தை கண்டித்து சார்பதிவாளர் அலுவலகத்தை பத்திர எழுத்தர்கள் முற்றுகையிட்டனர்.
கே.கே.நகர்,
சொத்து கிரைய பத்திர ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது ஏற்படும் காலதாமதம், வீண் அலைச்சல் போன்றவற்றை தடுப்பதற்காக தமிழக அரசு ‘ஆன்லைன்‘ மூலம் பத்திரங்களை பதிவு செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி திருச்சி கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் பதிவு முறை கடந்த 1–ந்தேதி தொடங்கியது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திர எழுத்தர்கள் சிலர் பத்திரம் பதிவு செய்ய விண்ணப்பங்கள் கொடுத்திருந்தனர். மேலும் பலர் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் பத்திர பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தனர்.
ஆன்லைன் மூலம் பத்திர பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதால் பத்திர எழுத்தர்கள் தாங்கள் கொடுத்த பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்று நேற்று காலை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
ஆனால் பத்திரங்கள் பதிவு செய்யாமல் அப்படியே இருந்ததாக தெரிகிறது. மேலும், நேற்று ஆடிப்பெருக்கு விழா என்பதால் பத்திரப்பதிவு செய்ய நிறைய பேர் வந்திருந்தனர். இதனை கண்ட அவர்கள் பத்திரப்பதிவு அதிகாரியிடம் கேட்டனர். அதற்கு கடந்த 1–ந்தேதி தான் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகிறது. எனவே பத்திரங்கள் பதிவு செய்வதில் தாமதம் ஆகும் என்றனர்.
இதனை கண்டித்து பத்திர எழுத்தர்கள், பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.