ஆடிப்பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் பெண்கள் சிறப்பு வழிபாடு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் பெண்கள் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Update: 2017-08-03 20:30 GMT
நெல்லை,

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் பெண்கள் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஆடிப்பெருக்கு


தமிழ் மாதத்தின் ஆடி 18-ம் நாள் ஆடிப்பெருக்கு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தங்களது குடும்பத்துக்கு நன்மை வேண்டியும், திருமணமான பெண்கள் கணவருக்கு ஆயுள் நீடிக்க வேண்டும் என்றும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், காவிரி தாய்க்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

இதேபோல் நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் நேற்று காலை பெண்கள் குவிந்தனர். அவர்கள் ஆற்றில் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வெற்றிலை பாக்கு, நாவல் பழம், கருமணி ஆகியவற்றை வைத்து வழிபாடு நடத்தினர்.

புது மஞ்சள் கயிற்றில்...

தொடர்ந்து வயதில் பெரியவர்களின் ஆசி பெற்று புது மஞ்சள் கயிற்றுடன் திருமாங்கல்யத்தை இணைத்து அணிந்தனர். பின்னர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பெண்களின் சிறப்பு வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

அதேபோல் நெல்லை வண்ணார்பேட்டை பேராச்சியம்மன் கோவில் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றிலும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் நெல்லை சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்