தேசிய ஊரக வேலை திட்டப்பணியை முறையாக வழங்கக்கோரி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

தேசிய ஊரக வேலை திட்டப்பணியை முறையாக வழங்கக்கோரி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2017-08-03 22:45 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார்நகர், சிவனேசன் நகர், மேட்டுத்தெரு மற்றும் ஐ.ஆர்.டி. சாலை பகுதியில் வசிக்கும் சுமார் 134 பயனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வந்த பணி தற்போது முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

மேலும் இது தவிர 50–க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே வேலை செய்ததற்கான சம்பள பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் மேற்கண்ட 2 கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த 200 பெண்கள் நேற்று கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை 

கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொடர்ந்து முறையாக வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இதையடுத்து தங்களது கோரிக்கை தொடர்பாக தேசிய ஊரக வேலை திட்டப்பணி குழுவின் ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் தலைமையில் அதிகாரி ராஜேந்திரபாபுவிடம் அவர்கள் மனு அளித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

அதே போல ஓபசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட குழிநாவல் கிராமத்தை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கிட கோரி கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபுவிடம் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்