மோட்டார் சைக்கிள் திருட்டு; வாலிபர் கைது
குன்றத்தூரில் மோட்டார் சைக்கிள் திருட்டில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், சக்தி நகர் பகுதியில் குன்றத்தூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்று விட்டார். சிறிது தூரம் விரட்டி சென்ற போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர் சோமங்கலம், நடுவீரப்பட்டு, திரு.வி.க. தெருவை சேர்ந்த பிரகாஷ் (வயது 20), என்பதும் மணிமங்கலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும், ஏற்கனவே மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் கைதானவர் என்பதும் தெரியவந்தது. அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் என 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.