நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கியது

நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நேற்று தொடங்கியது.

Update: 2017-08-03 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 28–வது ஆண்டு குமரி மாவட்ட கபடி சாம்பியன் ஷிப் 3 நாள் போட்டிகள் நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கபடி கழக தலைவர் பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட கபடி கழக செயலாளர் பென் எபனேசர் சாம் வரவேற்று பேசினார். மாவட்ட விளையாட்டு அதிகாரி (பொறுப்பு) ஆழிவாசன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட கபடி கழக செயலாளர் சுபாஷ், பொருளாளர் சந்திரசேகரன், உதவி தலைவர்கள் பாரத்சிங், தர்மலிங்க உடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கபடி போட்டிகள் தொடங்கியது. முதலில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த ஆண், பெண்கள் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் 8 பெண்கள் குழு உள்பட மொத்தம் 52 குழுக்கள் கலந்து கொண்டன.

மாலையில் கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான கபடி போட்டிகளும், கிளப் ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டவர்கள்) ஆண்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றன. இன்று (வெள்ளிக்கிழமை) கிளப் சீனியர் சப்–ஜூனியர் (16 வயதுக்கு உட்பட்டவர்கள்) ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா, கடந்த 2016–2017–ம் ஆண்டில் தேர்வு பெற்ற தேசிய, மாநில பல்கலைக்கழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா ஆகியவை நாளை (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

போட்டிகளில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், கன்னியாகுமரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் டேவிட் ஜெபசிங் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டுகிறார்கள்.

மேலும் செய்திகள்