2 ஆயிரம் டன் யூரியா உர மூட்டைகள் திருவண்ணாமலைக்கு வந்தன

நியூ மங்களூருவில் இருந்து ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் யூரியா உர மூட்டைகள் திருவண்ணாமலைக்கு வந்தன.

Update: 2017-08-03 21:15 GMT

திருவண்ணாமலை,

கர்நாடக மாநிலம், நியூ மங்களூரு துறை முகத்தில் இருந்து ரெயில் மூலம் யூரியா உர மூட்டைகள் நேற்று திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து உர மூட்டைகள் லாரிகள் மூலம் திருவண்ணாமலை நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் செண்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நியூ மங்களூருவில் இருந்து ரெயில் மூலம் திருவண்ணாமலைக்கு 1,956 டன் யூரியா உர மூட்டைகள் வந்துள்ளன. உர மூட்டைகள் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நடப்பு பருவ பயிர் சாகுபடி உபயோகத்திற்கு அனுப்பி வைப்பதற்காக தற்போது நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இருப்பு வைப்பு

மாவட்டத்தில் உள்ள தனியார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் உர உற்பத்தியாளர்களின் கிடங்குகளில் நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

யூரியா 13 ஆயிரத்து 867 டன்னும், பொட்டாஷ் 1,930 டன்னும், காம்ப்ளக்ஸ் 9 ஆயிரத்து 360 டன்னும், டி.ஏ.பி. 5 ஆயிரத்து 634 டன்னும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் எஸ்.ஏழுமலை மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்